ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை இந்திய கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் தமிழக மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்திய கடற்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது , கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பயிற்சியின் போதே , மீனவர் மீது தவறுதலாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும், கப்பலில் இருந்து கடற்படையினரிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , அதன் பின்னரே என்ன நடந்தது என்பது குறித்து அறிவிக்க முடியும் என கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தமிழக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மானாகிரியை சேர்ந்த வீரவேல் (வயது 32) எனும் மீனவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் , ஆழ் கடலில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி மூலம் மீட்கப்பட்டு , உச்சப்புள்ளி ஐ.என்.எஸ் கடற்படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டு , அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட பின்னர் , இராமநாதபுரம் அரச மருத்துவ மனையில் கடற்படையினர் அனுமதித்தனர், பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் ஆழ் கடல் மீன் பிடிப்பிற்காக ஒரு படகில் பத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
குறித்த மீனவர்கள் கோடியாக்கரை, ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளனர்.
அதேநேரம் படகில் இருந்த ஏனைய 09 மீனவர்களையும் பாதுகாப்பபாக கரைக்கு அழைத்து வர இந்திய கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.