ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் மனுச் செய்திருந்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் இந்த தீர்ப்பினால், விடுதலை பெற இருக்கிறார்கள்.