227
சுமத்திரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையின் கரையோரங்களுக்கு பாதிப்பு இல்லை என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தின் சுமாத்ரா தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டமை தொடர்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் எமக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை.சுமாத்ரா தெற்கில் ஏற்பட்டுள்ள 6.8 ரிச்டர் நிலநடுக்கத்தினால் இலங்கை கரையோர பிரதேசங்களிற்கு எதுவித பாதிப்பும் இல்லை.அத்துடன் இவ்விடயம் தொடர்பில் சகல பிரதேச செயலகத்திற்கும் அறிவுறுத்தல் எம்மால் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதே வேளை இந்து சமுத்திரத்தின் சுமாத்ரா தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்திருந்தது.
ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து கரையோரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love