ரணில்+ ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு தமிழ்க் கட்சிகளோடு பேசப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கும் ஐநாவை சமாளிப்பதற்கும் இது போன்ற அறிவிப்புகள் தேவை. அல்லது தமிழ் மக்களின் தலையில் ஏதாவது ஒரு அரைகுறைத் தீர்வை கட்டி விடுவதற்கு இது உகந்த தருணம் என்று ரணில் சிந்திக்கிறாரா?
ஏனெனில் 2015 ஆம் ஆண்டில் ரணில்+மைத்திரி அரசாங்கம் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பை உருவாக்க முற்பட்டது.அந்த யாப்புருவாக்கச் செய்முறைகள் இடைக்கால வரைபுவரை முன்னேறின.ஆனால் இடையே மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் குழப்பினார்.அதனால் யாப்புருவாக்க முயற்சிகள் இடையில் நின்று போயின. அதன்பின் ஆட்சிக்கு வந்த கோத்தாபய ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக கூறிக்கொண்டு ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். இப்பொழுது ரணில் மீண்டும் வந்து விட்டார் அவர் 2018 இல் விட்ட இடத்திலிருந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது அதே பழைய முயற்சிக்கு ஒரு புதிய லேபலை ஒட்டி அதைத் தொடரப் போகிறாரா?அல்லது முற்றிலும் புதிதாக ஒரு முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது பன்னாட்டு நாணய நிதியம் ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்குத் தமிழ் மக்களையும் பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமா ? என்ற கேள்விகளை தமக்குள் எழுப்பி தமிழ்த் தரப்பு ரணிலை எதிர் கொள்ள வேண்டும்.
அவ்வாறு தமிழ்த் தரப்பு ரணிலை எதிர்கொள்வதற்காக தங்களுக்கிடையே கலந்து பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று கூறி கடந்த வாரம் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எனைய கட்சித் தலைவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.அதில் அவர் சமஸ்ரிதான் தமிழ் மக்கள் கேட்கும் தீர்வு என்ற அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து அந்தக் கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அது தொடர்பில் அவர் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடுகூட உரையாடவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவருடைய அழைப்பை, கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகள் பொருட்படுத்தவில்லை. கூட்டமைப்புக்கு வெளியே உள்ள கட்சிகளும் அந்த அழைப்பை பொருட்படுத்தவில்லை.சம்பந்தர் அழைத்தால் மேசைக்கு வரலாம் என்ற நிலைப்பாட்டை ஏனைய கட்சிகள் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் சுமந்திரனின் அழைப்பு வெற்றி பெறவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை சம்மந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெறவிருந்த அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.அதாவது பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக தமிழ்த்தரப்பு தங்களிடையே பேசவேண்டிய விடயங்கள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முயற்சி சறுக்கிவிட்டது.
அப்படி ஒரு முயற்சி அவசியமானது. அதை கட்சிகள் தங்களுக்கிடையே தாங்களாக செய்ய வேண்டும். அல்லது குடிமக்கள் சமூகங்கள் அதை நோக்கி கட்சிகளை உந்தித்தள்ள வேண்டும்.ஏனென்றால் தமிழ்த்தரப்பு என்ன கேட்கின்றது என்பதனை ஒரே குரலில் சொன்னால் அதற்குப் பலம் அதிகம் என்று அபிப்பிராயம் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள் மத்தியில் உண்டு. தமிழ் குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அதை வலியுறுத்திப் பேசுவதுண்டு. தமிழ்மக்கள் மத்தியில் இருக்கும் பிரதான பலவீனமாக அதைச் சுட்டிக்காட்டிப் பேசும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் உண்டு.இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமிழ்த்தரப்பு தான் எதைக் கேட்கிறது என்பதனை ஒரே குரலில் முன்வைக்க வேண்டிய ஒரு கட்டாயத் தேவை உண்டு.
தமிழ் கட்சிகள் என்ன கேட்கின்றன ?இதுவரையிலும் தமிழ்த் தரப்பு முன்வைத்த தீர்வு முன்மொழிவுகளை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுமே,எல்லாக் குடிமக்கள் சமூகங்களுமே ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றன.அவை கூட்டாட்சிப் பண்புடைய -சமஸ்ரிப் பண்புடைய தீர்வைத்தான் – கேட்கின்றன.
இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் தமிழ்த்தரப்பு அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த ஒரு காலகட்டம் எதுவென்றால் கடந்த ஆறு ஆண்டுகாலப் பகுதிதான்.2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 ஐநா தீர்மானத்தின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் நாடாளுமன்றத்தை சாசனப் பேரவையாக மாற்றினார். அதாவது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசன பேரவையாக மாற்றப்பட்டது.அதிலிருந்து தொடங்கி கோத்தாபயவின் யாப்புருவாக்கத்திற்கான நிபுணர்குழு வரையிலும் தமிழ்த்தரப்பு தனது முன்மொழிவுகளை முன்வைத்து வருகிறது.இதில் தமிழ்க்கட்சிகள்,தமிழ் குடிமக்கள் சமூகங்கள்,தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்புகளும் கடந்த 6 ஆண்டு கால பகுதிக்குள் அதிகளவு முன்மொழிவுகளை வைத்திருக்கின்றன.
இதில் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தது ஒரு சமஸ்ரி முன்மொழிவு.அதுபோலவே வட மாகாண சபை முன் வைத்ததும் ஒரு சமஸ்ரி முன்மொழிவு.விக்னேஸ்வரனின் கட்சி கொன்பெடரேஷனை கேட்கின்றது.அதுவும் உயர்வான ஒரு சமஸ்ரிதான்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு சமஸ்ரிக் கட்டமைப்பைக் கேட்கிறது.அரசாங்கம் ஒற்றை ஆட்சி முறைமையை மாற்றி கூட்டாட்சிக்குத் தயார் என்று அறிவித்தால் தாம் ரணிலுடன் பேசத்தயார் என்று அக்கட்சி கூறுகிறது.
இதில் கூட்டமைப்பு ரணிலோடு இணைந்து உருவாக்க முயன்ற யாப்பைக் குறித்து விமர்சனங்கள் உண்டு.தமிழ் மக்களின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் முதலாவது யாப்புருவாக்க முயற்சி அதுவென்று சம்பந்தர் சொன்னார். கூட்டமைப்பு அதை சமஸ்ரிப் பண்புடையது என்று கூறியது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய அமைச்சர்களும் அது ஒற்றை ஆட்சிதான் என்று சொன்னார்கள்.சம்பந்தர் “பிரிக்கப்படமுடியாத, பிளவுபடாத இலங்கைத் தீவு” என்று திரும்பத் திரும்ப ஒரு மந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.சமஸ்ரி என்று வெளிப்படையாக லேபலை ஒட்டினால் அதைச் சிங்கள மக்கள் எதிர்பார்கள் என்றும் காரணம் கூறப்பட்டது. அதாவது நடைமுறையில் அந்தத் தீர்வு முயற்சியை அவர்கள் சிங்கள மக்களுக்கு ஒற்றை ஆட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். தமிழ் மக்களுக்கு அது கூட்டாட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் இப்பொழுது சுமந்திரன் கூறுகிறார் ஒரு சமஸ்ரித் தீர்வை நோக்கி எல்லாக் கட்சிகளும் ஒரு குரலில் பேச வேண்டும் என்று.
அவர் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டபடி சமஸ்ரிதான் தீர்வு என்பதனை தமிழரசுக்கட்சி உறுதியாகவும் வெளிப்படையாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் கூறுமாயிருந்தால் ஏனைய கட்சிகளும் அவர்களோடு இணைந்து ஒரே குரலில் அந்தக் கோரிக்கையை முன்வைக்கலாம். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைய மறுத்தால் அதுவும் நல்லதே.அக்கட்சி வெளியில் நின்று கொண்டு ஏனைய கட்சிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும். எனைய கட்சிகள் தமது கோரிக்கைகளில் இருந்து இறங்கினால் அவற்றை முன்னணி அம்பலப்படுத்தும். எனவே ஒரு கட்சி எதிர் நிலையில் நிற்பதும் நல்லது.
ரணில் இனப்பிரச்சினையை சர்வதேசமயநீக்கம் செய்ய முற்படுகிறார்.வெளியாரின் தலையீடின்றி பிரச்சினையைத் தீர்க்க வருமாறு தமிழர்களை அழைத்திருக்கிறரார்.போரில் வெல்வதற்கு அவர்களுக்கு வெளி நாடுகளின் ஆயுதமும் உதவிகளும் தேவை.ஆனால் சமாதானத்துக்கு அது தேவையில்லையாம்.தமிழ்த் தரப்பு அதை ஏற்கக்கூடாது.இந்தியாவையும் உள்ளடக்கிய ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும்.அந்த மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தின்கீழ் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மக்கள் கூட்டாட்சிக்கான ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுதுவதற்காகப் பேச வேண்டும்.
மேலும் இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்க முயலும் ஐ.எம்.எப் போன்ற அனைத்துலக அமைப்புக்களிடம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பதை பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாக வைக்குமாறு நிர்பந்திக்க வேண்டும்
ரணில் இப்பொழுது நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி.தந்திரமும் நிறைவேற்று அதிகாரமும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.ரணில் ஒரு நரி.அவர் தந்திரங்கள் செய்வார் என்று தமிழ்த்தரப்பு தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டிருக்க முடியாது.தமிழ்மக்கள் தாங்களும் புத்திசாலிகள் என்பதனை நிரூபிக்க வேண்டிய ஆகப்பிந்திய தருணம் இது.