207
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தாம் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பதாகவும், அதனால் தாம் உளரீதியான பாதிப்பை எதிர் கொண்டுள்ளதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவருக்கு , மாணவனின் தந்தை பாடசாலைக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ். போதான வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தை இன ரீதியான பிரச்சனையாக தோற்றப்பாட்டை ஏற்படுத்த சில தரப்புகள் முனைவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பாடசாலையில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் ,ஆளுநரிடம் , தமக்கு அச்சுறுத்தல் உள்ளமையால் தாம் உளரீதியான பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளதனால் தமக்கு பாதுகாப்பான பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் வழங்க வேண்டும், ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்ய வேண்டும், மாணவனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும், அவை மற்றைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என மூன்று கோரிக்கைகளை முன் வைத்து கடிதம் மூலம் அதனை ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் தாம் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட மாட்டோமர எனவும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்ய ஆளுநர் பணிப்பு!
ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை உடனடியாக கைது செய்து, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் காவல்துறையினருக்கு பணித்துள்ளார். அதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை யாழ்ப்பாண காவல்துறையினர் முன்னெடுத்து வரும் நிலையில், தாக்குதலாளி புத்தளம் பகுதிக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாடசாலைக்கு பாதுகாப்பு!
ஆசிரியர்கள் சிலர் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தாம் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டோம் என ஆளுநருக்கு அறிவித்துள்ள நிலையில் , பாடசாலை வளாகத்திற்கு வெளியே யாழ்ப்பாண காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த சம்பவங்கள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியாலாளர்களை, பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர்கள் சிலர் அச்சுறுத்தி, அவர்களின் கையடக்க தொலைபேசி , கமரா என்பவற்றை பறித்து, படங்களை அழித்து, பாடசாலை தொடர்பில் எந்த செய்தியும் வெளிவர கூடாது என அச்சுறுத்தி இருந்தனர். அது தொடர்பில் ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love