தெற்காசிய பிராந்திய நான்காவது கொள்முதல் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பு சினமன்கிரேன்ட் ஹோட்டலில் ஆரம்பமாகியுள்ளது. இம்மாநாடு இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை கொழும்பிலும் கண்டியிலும் நடைபெறவுள்ளது.
2011 ஆம் ஆண்டு நேபாளத்தின் கத்மண்டு நகரத்தில் ஆரம்பமான இந்த கொள்முதல் மாநாடு 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலும் அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷின் டாக்கா நகரிலும் நடைபெற்றது.
உலக வங்கி, ஆசிய ஆபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, நிதி அமைச்சு மற்றும் அரசாங்க நிதி திணைக்களம் ஆகியன இணைந்து இம்மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.
நாட்டின் நலனுக்காக புதிய பொருளாதார மற்றும் சமூக சூழலை ஏற்படுத்துவதற்காக மட்டுமன்றி, பேண்தகு அபிவிருத்தியை நோக்கி ஒரு தெளிவான பிரவேசத்தை ஏற்படுத்துவதற்கு இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் கொள்முதல் முறைமைக்கு நாட்டை மாற்றுவதன் மூலம் அரச நிதி முகாமைத்துவத்தைத் துரிதமாகவும், வினைத்திறன்மிக்கதாக்கவும் மேற்கொள்வதுடன் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து ஊழல் மோசடிகளுக்கான வாய்ப்புகளை குறைக்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டின் தலைமைப் பதவியை வகிக்கும் பங்களாதேஷ் நாட்டின் பாரூக் ஹூசைன் அப்பொறுப்பை இலங்கையின் பி அல்கமவிடம் கையளிப்பார்.