149
யாழ்ப்பாண தபாலக ஊழியர் மீது , யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஒன்றிணைந்து தாக்குதல் மேற்கொண்டதில், தபாலக ஊழியர் காயமடைந்துள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான நபர் யாழ்.காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமது தாயாரை பார்ப்பதற்காக தாக்குதலுக்கு இலக்கானவரும், மற்றுமொருவரும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இதன் போது ஒருவர் மட்டுமே வைத்தியசாலை விடுதிக்குள் சென்று நோயாளரை பார்வையிட முடியும் என பாதுகாப்பு உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வேளை ” ஏன் பாரபட்சமாக நடக்கிறீர்கள் – வேறு நோயாளியை பார்ப்பதற்கு ஒரே நேரத்தில் சில பார்வையாளர்களை அனுமதித்தீர்களே?” என நோயாளியை பார்க்கச் சென்றவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போது இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படவே ஒன்று கூடிய வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடாத்தினர் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நோயாளரை பார்க்க வந்த இருவரிடமும் நோயாளர்களை பார்வையிடுவதற்காக அனுமதி சீட்டை இல்லதாமையால் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் , அவர்கள் தம்முடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அவர்களில் ஒருவருக்கு படிக்கட்டில் கால் இடறியதில் காலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் , நோயாளிகளை பார்க்க வந்தவர்கள் மது போதையில் இருந்ததுடன் , தமது பொறுப்பதிகாரி மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love