நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 85ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30இற்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
கடந்த அமர்வின்போது, வடக்கின் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இப்பிரச்சினை குறித்து ஆராயும் வகையில் மாகாண சபையில் விசேட அமர்வை கூட்டுமாறும் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து நாளைய தினம் விசேட அமர்வாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
எனினும், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் விடுமுறையில் இருப்பதாலும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வெளிநாடு சென்றுள்ளதாலும் நாளைய தினம் குறித்த அமர்வை நடத்த முடியாதென இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தே உறுப்பினர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வை எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி நடத்துவதாக மாகாண சபை தீர்மானித்துள்ளது.