மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு அனைவருடனும் கலந்தாலோசித்து நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரியை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக் குறித்து சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் மற்றும் வைத்திய கலாநிதி நெவில் பெர்னாண்டோ உள்ளிட்டோருடன் நேற்று (20) இரவு தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
வைத்திய கலாநிதி நெவில் பெர்னாண்டோ மற்றும் சில பெற்றோர் தமது கருத்துக்களை இதன்போது தெரிவித்ததுடன், மாணவப் பிரதிநிதிகள் சிலரும் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக சகல பிரிவினராலும் முன்வைக்கப்படும் ஆலோசனைகளை மிக கவனமாக அவதானித்து வருவதாக இதன்போது கருத்துத்தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் மாணவர்களின் கருத்துக்களுக்கு விசேட அவதானத்தை செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்வைத்திய அதிகாரிகள் சங்கம், மற்றும் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுடன் தற்போது இவ்விடயம் தொடர்பாக பல கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதுடன், எதிர்காலத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் மருத்துவ சபையுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவும் தான் எண்ணியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.