கால்பந்து மன்னர் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெலே தனது 82-ஆவது வயதில் காலமானார். கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே கருதப்படுகிறார்.
1950-களின் இறுதியிலிருந்து 21-ஆண்டுகள் கால்பந்து விளையாடிய பெலே 1363 போட்டிகளில் விளையாடி 1,281 கோல்களை அடித்துள்ளார். இதில் தனது நாட்டுக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 92 கோல்களும் அடங்கும்.
கால்பந்து வரலாற்றில் உலகக் கிண்ணம் வென்ற அணியில் 3 முறை இடம்பெற்ற ஒரே வீரர் பெலே மட்டும்தான். 1958, 1962, 1970 என மூன்று முறை பிரேசில் அணி உலகக் கிண்ணத்தினை வென்றபோதும் அவர் அணியில் இருந்தார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் என 2000-ஆம் ஆண்டில் பெலேயை பிபா தேர்வு செய்திருந்தது.
2020-ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய ஒரு வாக்கெடுப்பில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, மாரடோனா ஆகியோரைவிட உலகின் மிகச் சிறந்த வீரர் என்று பெலே தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த சில காலமாக சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு 2021-ஆம் ஆண்டு மலக்குடலில் இருந்த புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது. எனினும் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த நவம்பரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பல உறுப்புகளின் செயலிழப்பு காரணமாக, அவரது முந்தைய மருத்துவ சிக்கல்களுடன் தொடர்புடைய பெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சியின் விளைவாக அவா் இறந்துவிட்டதாக மருத்துவமனை தொிவித்துள்ளது.