இந்திய நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடரின் 6ஆம் நாள் அமர்வு இன்று கூடுகிறது.. அவை தொடங்கியவுடன் அதானி குழுமம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தாண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து மறுநாள் பிப். 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது.
வரவுசெலவுத் திட்ட விவாதம் இரு அமர்வுகளாக நடைபெற இருந்தது.. நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்த மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது..
குறிப்பாக புதிய வரி முறையில் இருப்போருக்கு 7 லட்ச ரூபாய் வரை வருமான வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாஜக 2.0 அரசின் கடைசி வரவுசெலவுத் திட்டம் என்பதால் இதில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இருப்பினும், வரவுசெலவுத் திட்ட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாளில் இருந்தே நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியே வருகிறது.. அதானி குறித்து ஹிண்டர்ன்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள புகார்கள் நாடாளுமன்றத்திற்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடிய நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்க இருந்தது. மத்திய அரசு இருப்பினும், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற குழுவை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இருப்பினும், இது அரசு தொடர்பான விவகாரம் இல்லை என்பதால் இந்த விவகாரத்தை விவாதிக்க முடியாது என்று அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
நேற்று நாடாளுமன்றம் கூடிய போதும், இரு அவையிலும் இந்த விவகாரத்தை பல்வேறு எதிர்க்கட்சிகள் எழுப்பின. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் நாடாளுமன்றம் முதலில் பிற்பகல் வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
மதியமும் அவை தொடங்கிய பிறகு, மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழலில், நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரின் 6ஆம் நாள் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. அவை தொடங்கியது முதலே அதானி குழுமம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்ன்பெர்க் நிறுவனம் அதானி குறித்து மொத்தம் 413 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. சுமார் 2 ஆண்டுகள் ஆய்வு செய்து இந்த ஆய்வறிக்கை அவர்கள் தயார் செய்துள்ளனர். இதில் அதானி நிறுவனம் செயற்கையான முறையில் பங்கு விலையை ஏற்றியதாகவும் நிறுவனத்திற்கு அதிக கடன் உள்ளது தொடங்கிப் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று போராட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.