‘யாழ்ப்பாணத்தின் முக்கிய செயலகத்தை அரசிடம் இருந்து தனியார் ஒருவர் சொந்தமாக வாங்கிவிட்டாரோ’ என்று அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் கேட்டேன். அவரோ சிரித்துவிட்டு ‘ஏன் அப்படிக் கேட்கிறாய்’ என்றார். நானோ ‘இல்லை பழைய ஆட்கள் நிறையப் பேர் வேலை செய்கிறார்களே இவர்களுக்கு இடமாற்றம் இல்லையா?’ என்றேன். ஓ..அப்படியா. உதுகளைப் பற்றியெல்லாம் கதைக்கக் கூடாது வந்த வேலையை மட்டும் பார்’ என்றான். ‘ஏன் கதைத்தால் பிரச்சினை வருமோ’ என்றேன். அவனோ ‘ பிரச்சினை வராது பதவியில் இருக்கின்றவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள் அதாவது தங்களோடு ஒத்தோடுபவர்களை இடமாற்றமாட்டார்கள். தங்களுக்கு வேண்டப்படாதவர்களை அல்லது புதிதாக வருபவர்களை குறுகிய காலப் பகுதியில் இடமாற்றி விடுவார்கள் என்றால் பாரேன்’ என்றான்.
சேவைக்காலம் முடிவடைந்ததும் இடமாற்றத்தை வழங்குவது அரச நடைமுறையாகும். ஆனால் இந்த அலுவலகத்தில் சேவைக் காலம் முடிவடைந்தும் பலர் தொடர்ந்தும் இங்கு வேலை செய்கிறார்கள். சேவைக்காலம் முடிவடையாத பலரை வெளியேற்றியும் இருக்கிறார்கள். மேலதிகாரிகள் இந்த விடயத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதற்கு அரசியலும் செல்வாக்கு செலுத்துகிறது. சீதனமாக வழங்கிய வீடு போல இந்த அலுவலகத்தில் குந்திக்கொண்டு புதிதாக வருபவர்களை அழையா விருந்தினர் போல ஒதுக்குகின்றார்கள். பொதுவாக இந்த அலுவலகம் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் புதிதாக நியமனம் பெற்று அல்லது இடமாற்றம் பெற்று வருபவர்களை அன்பாக அழைக்க ஒருவரும் இல்லை. அதுமட்டுமா புதிதாக வருபவர்களிடம் இங்கு வேலை கடினம் உங்களால் முடியாது. வேறு அலுவலகத்துக்கு மாற்றிப் போங்கள் என்று பயப்புடுத்துகின்றனர்.
கடந்த முதலாம் திகதி திட்டமிடல் பிரிவுக்கு கீழ் பணியாற்றிய ஒரு பெண் பணியாளரை இந்த அலுவலகத்தில் இருந்து இடமாற்றி இருக்கிறார்கள். இந்த பெண் பணியாளர் வேறோர் அலுவலகத்தில் இருந்து இடமாற்றம் பெற்று இந்த அலுவலகத்துக்கு வந்து இரு வருடங்கள் பூர்த்தியாக முன்னரே வேறோர் அலுவலகத்துக்கு இடமாற்றி இருக்கிறார்கள். இந்த அலுவலகத்தில் பணியாற்றும் காலப் பகுதியில் அதிகாரியால் பல பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்துள்ளார். அதாவது வேறோர் அலுவலகத்துக்கு இடமாற்றம் பெற்று போகும் படி அச்சுறுத்தியும் இருக்கிறார். இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஏனைய பணியாளர்கள் முன்னால் நாயே….. பேயே…. என்று அடிக்கடி திட்டியும் உள்ளார். அதனால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட இந்தப் பெண் பணியாளர் நீங்களே என்னை இடமாற்றி விடுங்கள் என்று கூறியுள்ளார். இதனை சாட்டாக வைத்து இந்தப் பெண் பணியாளரை சம்பந்தப்பட்ட அதிகாரி இடமாற்றியுள்ளார்.
இந்த அலுவலகத்தில் 2005 ஆம் ஆண்டில் இருந்து திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றி வரும் 3 பேர் 11 வருடங்கள் கடந்தும் இடமாற்றமின்றி பணிபுரிகின்றார்கள். முகாமைத்துவ உதவியாளர்களாக 10 வருடங்களுக்கு மேல் இடமாற்றமின்றி 2 பேர் தொடந்து பணியாற்றி வருகின்றார்கள். சமுர்த்தி உதவித்திட்ட முகாமையாளர் ஒருவர் 2004 ஆம் ஆண்டில் இருந்து இடமாற்றமின்றி பணியாற்றி வருகிறார். திட்டமிடல் அதிகாரி தனது அலுவலகத்தில் மட்டுமல்ல பிரதேச செயலகங்களில் பணிபுரிகின்றவர்களையும் இடமாற்றி விடுகின்றார். அங்கேயும் தனக்கு வேண்டப்பட்டவர்கள் என்றால் இடமாற்றம் செய்யாமல் தனக்கு வேண்டப்படாதவர்களை இடமாற்றி விடுகிறார். தெல்லியூர் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த உதவித் திட்டமிடல் பணிப்பாளரை யாழ்.பிரதேச செயலகத்துக்கு இடமாற்றினார். இப்படியாக தனக்கு வேண்டப்படாதவர்களை இடமாற்றி தனக்கு வேண்டப்பட்டவர்களை எடுத்து விடுகிறார். நிர்வாகச் சீர்கேடு காரணமாக இந்த அதிகாரி மீது விசாரணை வந்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அரச அலுவர்களை இடமாற்றம் செய்வதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரி ஒருவர் செய்த இடமாற்ற குளறுபடி கடந்த வருடம் கையுமெய்யுமாக பிடிக்கப்பட்டு அவரை இடமாற்றிய சம்பவம் எல்லோருக்கும் தெரியும்
கீழ் பணிநிலையில் இருக்கும் அரச அலுவலர்கள் மேல் பதவியில் இருப்பவர்களால் நொந்து நூலாகிறார்கள். அலுவர்களுக்கே இந்த நிலை என்றால் தேவை கருதி அரச அலுவலகங்களுக்குச் செல்லும் மக்களுக்கு எந்த நிலை உருவாகும். என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பதற்கு எல்லா அரச அலுவலகங்களிலும் பணியாளர்கள் தேவைக்கு அதிகமாக இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் இடமாற்றம் கோரி பணியாளர் ஒருவர் கடிதம் வழங்கினால் இங்கு பணியாளர்கள் குறைவு என்ற காரணத்தால் உங்களை இடமாற்ற முடியாது என்று சொல்கிறார்கள். மற்றும் யாருக்கு எந்த வேலையை வழங்குவது என்று தெரியாமல் வேலையை ஒப்படைத்து விடுகிறார்கள். இதன் காரணமாக பல பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் கோரி நிற்கிறார்கள். எதற்காக இவர்கள் இடமாற்றம் கோருகிறார்கள் என்பதற்கான தீர்வினைப் பெறாமல் இருப்பதால் தான் பல அலுவலகங்களில் அதிகாரிக்கும் அவரின் கீழ் பணியாற்றும் அலுவலர்களுக்கும் இடையில் பிரச்சினை எழுகிறது. இந்த அலுவலகத்தில் அண்மையில் பலரை இடமாற்றி விட்டு இப்பொழுது அலுவலர்கள் குறைவு என்று புதிதாக ஆட்களை எடுக்கின்றார்கள். அதாவது தமக்குத் தெரிந்தவர்களை கொண்டு வாறதிற்கு அதிகாரிகளால் போட்ட திட்டம் இது.
திட்டமிடல் என்பதைப் பார்க்கின்ற போது யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். ஆனால் யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் பின்நோக்கி இருக்கிறது. இதற்கு காரணம் அபிவிருத்தி வேலை சம்பந்தமான திட்டமிடலை கிடப்பில் போட்டுவிட்டு மேலே சொன்னது போன்ற திட்டத்தை தீட்டுகின்றார்கள். மேலதிகாரி இந்த விடயம் சம்பந்தமாக கண்டுகொள்வதில்லை. தனது பொறுப்பில் உள்ள செயலகத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத மேலதிகாரியால் இந்த செயலகத்தின் கீழ் இயங்கும் பிரதேச செயலகங்களை இவரால் எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பது கேள்விக்குறியே.
தொடரும்….