மின்கட்டணத்தை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 66 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தவிர்ந்த ஏனைய 03 உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு மேலதிகமாக 287 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டும் நோக்கில், 66% மின் கட்டண அதிகரிப்பு யோசனை அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டு கடந்த மாதம் 02 ஆம் திகதி இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய, ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்தின் அடிப்படையில், மின் கட்டணத்தை 66 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின் கட்டணப் பட்டியல் தயாரிக்கப்படும் விதம் தொடர்பில் ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் விளக்கமளித்துள்ளன. அந்தவகையில் புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு இதுவரை நடைமுறையிலிருந்த 680 ரூபா கட்டணத்தொகை 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை , 30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றுக்கு 261% அதிகாிப்பு ஏற்பட்டு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம் 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும்.
90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரையும் 200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையைக் கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண திருத்தத்தின் கீழ் சாதாரணமாக வீடொன்றில் பயன்படுத்தப்படும் மின்சாரம், 900 அலகிற்கான பிரிவிற்குள் உள்ளடக்கப்பட்டு மின் கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண அதிகரிப்பு யோசனையானது மின்சார சபையினால் கோரப்பட்டிருந்த மின் கட்டண திருத்தத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் இலங்கைப் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின்சார சபை கோரிய கட்டண திருத்தத்தின் அடிப்படையில், பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மின்சார கட்டண முறையை முன்மொழிந்த போதிலும், ஆணைக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது