என் கண்களின் முன்னால்
காய்ந்து கிடக்கிறது என்முற்றம் .
உயர வளர்ந்த முட்புதர் மத்தியில்
உடைந்த வீட்டின் கூரை தெரிகிறது.
வீட்டின் மேலாக நீலமேகம்
திரைந்து நகர்ந்துகொண்டிருக்கிறது.
என் கைகளுக்கு எட்டிவிடும் தூரத்தில்
எனக்கு கிட்டாமலிருக்கிறது என்வீடு.
வீட்டின் உரித்து எனதென்ற பத்திரமும்
சாவிகளும் என்னிடமே உள்ளன.
என்வீடென்பதற்கான எல்லாம் இருந்தும்
அது தமதென்கிறார்கள் அவர்கள்.
கடலைக் கடந்து போய்விடும்படி
தினமும் என்னை விரட்டுகிறார்கள்.
வானத்து நட்சத்திரங்களை விதைத்து
அறுவடைக்கு காத்திருக்கிறேன் நான்.
எப்படி போய்விட முடியும்
எனக்கே எனக்கென்ற நிலத்தினை விட்டு.
நேற்றொருமைந்தன் அவர்களை விரட்ட
நெஞ்சினை நிமிர்த்திப் போனான். அவன்
காலடித்தடங்கள் கண்ணுக்குள் இப்போதும்
காலங்கள் தான் கரைகின்றன.
மூன்றாம் தலைமுறையும் நிலமற்றதாக
எத்தனை நாட்கள் தான் இப்படி கழியும்.
இலையுதிர் கால மரத்தைப்போல
எல்லாவற்றையும் இழக்கிறதென் காலம்.
பறவைக்கு மரக்கிளை உண்டு
பாம்புக்கோர் புற்றும் உண்டு
பாழும் தமிழர் எங்களுக்கேன்
வாழ்நிலமென்று ஒருநிலமில்லை.
தெருவில் சமைத்து
தெருவிலேயே உண்கிறேன் நான்.
உறுத்தும் குளிரிலும்
உறங்கிக் கிடக்கிறேன் தெருவில்..
பார்வையாளர்களும் படமெடுப்பவர்களும்
பாட்டுடன் கூத்துமாய் பகலெல்லாம் கழிகிறது.
சொந்தவீட்டுக்கனவைத் தொலைத்து
இன்னும் எத்தனைகாலம் இப்படிக் கழியும்.
சேர்த்துவைத்த நம்பிக்கைகளை
தின்றுகொண்டிருக்கிறது வாழ்க்கை.
நிலமற்ற என்கனவுகளை விதைத்தபடி
இரவுக்குள் நுழைகிறேன் நான்..
கைக்கெட்டும் தூரத்தில்
கனத்துக்கிடக்கும் என்நிலத்தில்
சப்பாத்துகளின் தடங்கள் படிகின்றன.
நிலத்தை சுரண்டும்
ஆயுதங்களை தோளேந்திய அந்நியர்கள்
தாளமிடுகின்றார்கள் என் நிலத்தில்.
-ஆதிலட்சுமி சிவகுமார்