ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவரது நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட சபை உறுப்பினர்களை தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த 2019- ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக சூரத் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுவதாக லோக்சபா செயலகம் அறிவித்தது.
இது தொடர்பாக லோக்சபா செயலகம் பிறப்பித்த உத்தரவில், சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் விளைவாக வயநாடு எம்.பி ராகுல் காந்தி, தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து மக்களவை பிரதிநிதித்துவத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (e) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ன் கீழ் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், குற்றவழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு எதிராக பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தகுதி நீக்கம் செய்வது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது எனவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3) அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் அறிவிக்கக் கோரி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த மனு இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.