ஏட்டி லெழுதிக் காட்டவொண் ணாதவன்
நாட்டிற் குருவானான் உந்தீபற
நமக்குக் குறை வில்லையென் றுந்தீபற
– நற்சிந்தனை
இன்று ஈழநாட்டில் எங்கள் குருநாதன்” என்று யாரும் பேசத் தொடங்குவாராயின் உடனே “எங்கள் குருநாதன்” என்னும் ஒப்புயர்வற்ற குரு வணக்கப் பாசுரத்தை எமக்களித்த யோகசுவாமிகளின் ஞாபகமே எங்கள் எல்லார் உள்ளங்களிலும் உதிக்கும். சுவாமிகள் சமயாதீதப் பழம்பொருளானவர். எம்மார்க்கத்தினரும் அவர்களைத் தம்மார்க்கத்தவர் என்று ஏற்றுக்கொள்ளத்தக்க மார்க்கங் கடந்த குணாதீதரேயாவர். அவர்கள் தங்கள் குருநாதனாகிய செல்லப்பாச் சுவாமிகளைப் பற்றிப் படிக்கும் போது, குருசீடம் முறையொன்றும் கொள்ளான் – செல்வன்குணாதீதன் ஒருவரையும் கும்பிட்டு நில்லான்.
என்று விவரித்ததையே யாமும் எங்கள் குருநாதனின் தன்மையை விளக்கிக் காட்டக் கூறுவோம். உண்மைக் குருவானவன் உயர்ந்த அநுபூதிமானாகும். உயர்ந்த அநுபூதிச் செல்வர், தாம் குருவென்றும் வேறுசிலர் சீடரென்றும் உலகில் எவரையும் வேறுபிரித்துப் பாரார். அவர்களுக்குப் பார்ப்பதெல்லாம் பரமாகவே யிருக்கும். தமக்கு அந்நியமாக வேறொன்றையு மறியார். அப்படியானவர்கள் சிலரை அஞ்ஞானிகள் என்றும் தம்மை அவர்களுக்குப் போதனை செய்யும் குருமார் என்றும் எஞ்ஞான்றும் எண்ணார். அநுபூதிச் செல்வரின் இலக்கணங்களுள் இது மிகவும் சிறந்த வொன்றாகும். எங்கள் குருநாதனைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்களுக்கு ஞாபகப்படுத்தும் போதனைகளுள்,
நானே நீ! நீயே நான் !! உனக்கும் எனக்கும் ஒரு வித்தி யாசமுமில்லை. உன்னைப்போலவே யான் இருக் கின்றேன்.
உனக்கு இரண்டு கண்கள், எனக்கும் இரண்டு கண்கள்; உனக்கு இரண்டு கைகள், எனக்கும் இரண்டு கைகள்.
என்பன அடிக்கடி கூறப்பட்டுள்ளன என்பதனை யாவருமறிவர். சால அன்புடன் சென்று வணங்குவார்க்குச் சுவாமிகள் “நீயும் நானும் ஒன்றாச்சு நித்தி யானந்தம் வாச்சுப்போச்சு” என்று கூறி மகிழ்வார்கள்.
உலகின்கண் குருமார் பல்வகைப்படுவர். எல்லாவகையினரைப்பற்றியும் யாம் ஈண்டு விரிக்கவில்லை! எடுத்துக்கொண்ட எமது பொருளுக்கேற்றவற்றை மட்டுமே காண்போம். எல்லா வகையான குருமாருள்ளும் ஞானகுருவே சிறந்த வகையினர். அநுபூதி பெற்ற அருட்செல்வர்களே ஞானிகளாவர். ஏனையோர் சமயகுரு, வித்தியாகுரு, கிரியா குருவெனப்படும் பிரிவுகளுள் அடங்குவர். ஞான குருவிலும் அதிட்டிதகுரு, ஆவேசகுரு என இரு பெரும் வகையினர் உளர். சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருஞானசம்பந்த சுவாமிகள் திருநாவுக்கரசு சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள் போன்றவர்கள் அதிட்டித குருமார் ஆவார். திருப்பெருந்துறையில் குருந்தைமரத் தடியில் திருவாதவூரரை ஆட்கொள்ள வெளிவந்த இறைவன் திருக்கோலமே ஆவேசகுருவாம். இறைவன் நால்வரையும் அதிட்டித்து நின்று ஞானமளித்தனர். அவர்களை ஆட்கொண்டு அதிட்டிப்பதற்கு முன்னர் அவர்கள் நம்மவரேயாவர் என்று இறைவன் தன் திருக்கோலங்காட்டி அவர்களை யாட்கொண்டானோ அன்றே அவர்கள் இறை மனிதர் ஆனார்கள். அவ்வாறு “மானும் மழுவுங் கரந்து மண்மிசை காணும் படி வந்த” செல்லப்பா சுவாமிகளை என்று எங்கள் குருநாதன் அருந்தவர் வாழ் நல்லூர்த் தேரடியிற் தரிசித்தாரோ அன்றே அவர் பேசாதன வெல்லாம் பேசினார். எதற்கும் கூசாது நின்ற சிங்கக்குட்டியைப் பார்த்து, “நீ யார்! எடா!” என்று அவர் அதட்டினார். அப்பொழுதே இவர் அவருக்கு ஆட்பட்டு விட்டார். குருவாகிய சிங்கத்தின் கண்ணிற்பட்ட எவரும் தப்பிப்போக மாட்டார்களல்லவா? மேல்வரும் திருப்பாடல்களால் தம்மையவர் ஆட்கொண்ட வரலாற்றைக் கூறுகின்றார்:
அருளொளிக்குள் ளேபுகுந்து சென்றேன்யான் ஆங்கே
இருள்சூழ்ந் திருப்பதைக் கண்டேன் – பொருளறியேன்
ஓர் பொல்லாப் பில்லையென வோதினான் கேட்டுநின்றேன்
மர்மந்தே ராது மலைத்து.
மலைத்து நின்ற என்னை மனமகிழ நோக்கி
அலைத்துநின்ற மாயை அகலத் – தலைத்தலத்திற்
கைகாட்டிச் சொல்லலுற்றான் கந்தன் திருமுன்றில்
மெய்ம்மறந்து நின்றேன் வியந்து
வியந்து நின்ற என்றனக்கு வேதாந்த உண்மை
பயந்தீரும் வண்ணமவன் பண்பாய் – நயந்துகொள்
அப்படியே உள்ளதுகாண் ஆரறிவார் என்றானால்
ஒப்பில்லா மாதவத்தோன் உற்று
உற்றாரும் போனார் உடன் பிறந்தார் தாம்போனார்
பெற்றாரும் போனார்கள் பேருலகில் – மற்றாரும்
தன்னொப்பார் இல்லாத் தலைவன் திருவருளால்
என்னொப்பார் இன்றியிருந்தேன்.
ஞானோதய தினமே அஞ்ஞானவஸ்தமன தினமுமாகும். எனவே யாம் குருநாதன் என்று ஏத்தி வழிபடும் யோகசுவாமிகள் என்று பிறந்தார் என்பது இப்போது யாவரும் அறிவர். அவருக்கு அன்னையும் தந்தையும் அவர் குருவேயாவர். அவரோ மானும் மழுவுங் கரந்து மண்மிசை யாரும் காணவந்த மாதவச் செல்லப்பர் ஆகும்.
அதிட்டித குருவானவர் சிவமேயாவர். குருவே சிவமெனக் கூறினன் நந்தி. அருட்குருவான அவருக்குச் சாதியேது? சமயமேது? அவருக்கு யாது மூரே ஆகும், யாவரும் கேளிரே ஆவர், “சிவமானவா பாடித் தௌ்ளேணங் கொட்டாமோ” என்கிறார் மணிவாசகர். குருவாக ஆட்கொள்ளப்படுவதற்கு முன் அவரின் பிறந்த இடம், பெற்றோர், வயது, மதம், சாதி எல்லாம் யாருக்குத் தேவை? வரலாற்றாசிரியர்க்கே அவை தேவைப்படும். சாதகர்க்கும் அன்பர்க்கும் அடியார்க்கும் இவ்விவரங்கள் தேவைப்படுமா? அவ்விதம் தேவைப்படுமெனக் கண்டால் அருளே உருவாகக் காசினியில் திகழ்ந்த இவர்களே யாவையும் விளம்பியிருப்பார்களன்றோ? அவர்கள் திருவார்த்தைகளே அவர்கள் பிற்சந்ததியார்க்கு விட்டுச்சென்ற செல்வமாகும். அச்செல்வத்தில் அழுந்தி ஆன்ம ஈடேற்றம் பெறுதலே யாவரும் அவர்களுக்குச் செய்யும் நன்றியாகும். அவர்களைப் பற்றி நூல்கள் எழுதுதல், விழாக்கள் நடத்தல், மேடைச் சொற்பொழிவுகளும் குருபூசைக் கொண்டாட்டங்களும் ஒழுங்குசெய்தல் ஆகியவை மிகச் சிறியளவு பயனுடையனவேயாகும். இவை இந்நாட்களில் பெரும்பாலும் சுயவிமர்சன மேடைகளாகவே அமைந்து வருகின்றன. எங்களோடு சேர்ந்து எங்களுள் ஒருவராக அறிந்தும் அறியாமலும் உணர்ந்தும் உணராமலும் கண்டும் காணாமலும் பெரும்புதிராக உருவமெடுத்து உலாவிவந்த எங்கள் குருநாதன் முற்றுந் துறந்த முனிவராக, முக்காலத்தையும் அறிந்த ஞானியராக, முழுமையான வாழ்வு வாழ்ந்திருக்கிறார். பயனுள்ள அவர் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் ஒவ்வொரு செய்கையின் பொருளையும், ஒவ்வொரு பேச்சின் விளக்கத்தையும் ஒவ்வொரு “மௌன மொழி” யின் தத்துவத்தையும் ஒவ்வோர் யோகப் பார்வையின் ஆனந்தத்தையும் நேரில் அனுபவித்த நம் சந்ததியினர் பெரும்பாக்கியசாலிகளே யாவர்.
சுவாமிகளைப் பற்றி யாம் வருங்காலச் சந்ததியினருக்கு விளக்க முயற்சிக்க வேண்டாமோ? எதுகை மோனை பொதிந்த சிறந்த தமிழ்நூல்களை எழுதலாம். ஏட்டி போட்டியாகச் சங்கங்கள் நிறுவலாம். மூலை முடுக்கெல்லாம் ஆச்சிரமங்களும் மண்டபங்களும் நிறுவலாம். இவற்றால் உளதாம் பிரயோசனம் மிகவும் சிறியதேயாகும். அப்படியாயின் யாது செய்தல் வேண்டும்! அவர்கள் கூறிய ஒழுக்கங்களை வாழ்க்கையில் கைக்கொள்ளுங்கள். உங்களைப் பின்பற்றி உங்கள் பிள்ளைகளும், வாழையடி வாழையாக வாழ்வை வளம்படுத்துவார்களாக!. போதிப்பதில் என்ன பயன்? சாதிப்பதிலேயே யாவும் தங்கியிருக்கின்றன. மூலையில் இருந்தாரை முற்றத்தே விட்டவன்சாலப் பெரியனென் றுந்தீபற தவத்திற் தலைவரென் றுந்தீபற, – திருவுந்தியார்
சிவதொண்டன் சபையினர்