வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி மத்திய, மாகாண அரசுகளிற்கு கடந்த காலங்களில் பல வழிகளிலும் கோரிக்கை விடுத்த போதும் இன்றுவரை வடமாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவுள்ளது. இந்நிலையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் யாழ். மாவட்டச் செயலக முன்றலில் கடந்த 20.02.2017 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. அக்கலந்துரையாடலின் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
01) கடந்த 2015 ஆம் ஆண்டு எம்மால் நடாத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக வட மாகாணஅமைச்சின் கீழ் 851 அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான ஆளணி உருவாக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டதாக வடமாகண அமைச்சர்களால் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் அவ் வெற்றிடங்களில் விண்ணப்பம் கோரப்பட்டு பரீட்சை அடிப்படையில் இது வரை 50 இற்குக் குறைவான நியமனங்களே வழங்கப்பட்டதை நாம் அறிந்துள்ளோம் . எனவே மிகுதி வெற்றிடங்களான சுமார் 800 வெற்றிடங்களை காலதாமத இழுத்தடிப்பின்றி வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
02) தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் வடமாகாண சபையினால் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நியமனங்களுக்கான தெரிவு நபர்கள் பலர் பல்வேறு தரப்பினர்களின் செல்வாக்குகளின் ஊடாகவும் உரிய கால எல்லையில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றாதவர்களாகவும் உள்ளதை அறிந்துள்ளோம் . எனவே உண்மையில் விசுவாசத்துடன் போர்க்காலத்தில் பணியாற்றிய, பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதை நாம் ஆதரிக்கின்றோம். அதேவேளை செல்வாக்கினாலும் குறிப்பிட்ட கால எல்லையில் கடமையாற்றாத தொண்டராசிரியர்களின் நியமனங்களை எதிர்கின்றோம்.
03) நாடளாவிய ரீதியில் 8 ஆயிரம் தகவல் அறியும் சட்ட உத்தியோகத்தர் வெற்றிடங்கள் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிலையில் வேலையற்ற பட்டதாரிகளை அவ் வெற்றிடங்களில் உள்வாங்குவதாக கூறப்பட்ட போதிலும் ஏற்கனவே பணியில் உள்ள அரச பணியாளர்களிற்கே மேலதிக பணியாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுவருவதாக அறியமுடிகிறது. அவ்வாறான நிலையில் முன்னர் குறிப்பிட்டது போல வேலையற்றிருக்கும் பட்டதாரிகளை தகவல் அறியும் உத்தியோகத்தர்களாக நியமிக்குமாறு வலியுறுத்துகின்றோம். இதேவேளை பட்டதாரிகளிற்கு ஆண்டுதோறும் நியமனங்கள் வழங்கும் வகையில் ஒரு பொறிமுறை ஒன்றினை வடமாகாண சபையும் மத்திய அரசாங்கமும் உருவாக்குமாறு இச்சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றோம்.
04) வடமாகாண போக்குவரத்து அமைச்சின் நியதிச்சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் பட்டதாரிகளை இணைப்பதற்கான 200 வகையான வெற்றிடங்கள் உள்ளதாக அறிந்துள்ளோம். எனவே அவ் வெற்றிடம் தொடர்பிலும் கவனத்தில் எடுக்குமாறு வேண்டுகின்றோம். மேலும் வடமாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவலின் படி ஆரம்பக்கல்வி ஆசிரியர்களிற்கான 1000 வெற்றிடங்களை இம்மாதம் நிரப்புவதற்கு விண்ணப்பம் கோருவதாக அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் அவ் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை உடனடியாக கோரி வேலையற்ற பட்டதாரிகளை உடனடியாக அவ் வெற்றிடங்களில் நிரப்புமாறு வலியுறுத்துகின்றோம்.
05) வடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்வெற்றிடங்களை நிரப்புவதற்காக 849 ஆளணி வெற்றிடங்களுக்கான போட்டிப் பரீட்சை அண்மையில் நடாத்தப்பட்டது. அப்பரீட்சை பெறுபேற்றில் சித்திப்புள்ளியின் அடிப்படையில் 779 பேர் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் தேவையாகவுள்ள 70 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் விரைவில் கோரப்பட வேண்டும். அத்துடன் சித்தியடைந்த 779 பேரையும் முழுமையாக ஆசிரியர் சேவை நியமனத்திற்குள் உள்வாங்குமாறு வலியுறுத்துகிறோம்.
06) வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனால் முன்மொழியப்பட்டு 21.02.2017 அன்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட M/85/2017/3 இலக்க பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் (4000) ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதால் அழகியல் பட்டதாரிகள் மற்றும் கலை பட்டதாரிகளை ஆரம்பக் கல்வி ஆசிரியர்களாக நிபந்தனைகளுடன் உள்ளீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண கல்வி அமைச்சிடம் இச் சபை கோருகின்றது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு நின்றுவிடாமல் அதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து கால இழுத்தடிப்புக்களின்றி தீர்க்கமான எழுத்துமூலமான பதிலினை மேற்குறித்த துறைசார் உயர்அதிகாரிகள், மத்திய, மாகாண அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் பகல், இரவு தொடர் போராட்டம் தொடர்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே போலி வாக்குறுதிகளால் ஏமாந்து நீண்டகாலம் வேலையில்லாத காத்திருப்பினால் மன உளைச்சல்களிற்கு உள்ளாகியுள்ள அனைத்துப் பட்டதாரிகளும் இப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்வகையில் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதுவே எங்கள் கோரிக்கைகளிற்கான இறுதி வலுவான போராட்டமாக அமையட்டும். உறுதியுடன் அனைவரும் அணிதிரள்வோம்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம்