குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பெயரில் அரச திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மனு கையளித்துள்ளார்.
குறித்த மனுவில் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று உறுதி செய்த ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழாவில் 69 லட்சம் மரம் நடும் திட்டத்தை அறிவித்து, அதனை முதலமைச்சர் ஆரம்பித்து அந்த விழாவில் தலைமைச் செயலாளராகிய தாங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் பங்கேற்று இருப்பது அரசு நிர்வாகம் பற்றி வாக்களித்த மக்களுக்கு தவறான செய்தியை சொல்லி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றவாளியின் படத்தை அரச அலுவலகங்களில் வைப்பது, அரசு விழாக்களில் இடம் பெறச்செய்வது, அவர் பெயரில் அரசு திட்டங்களை செயல்படுத்துவது எல்லாமே பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை என்ற கோட்பாட்டிற்கு முற்றிலும் மாறாகவும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே உதாசீனப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணத்தில் திட்டங்களை அறிவித்து குற்றவாளியின் பெயரில் செயல்படுத்தி வருவதும் எதிர்கால தலைமுறையினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் மக்களாட்சியின் மாண்பின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.