நிலமீட்பு போராட்டத்தில் கடந்த 27 நாட்களாக ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்கு சென்றுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், பாடசாலை கல்வியை துறந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் பயிற்சியொன்றை வழங்கியுள்ளனர்.
ஆசிரியர் சங்கத்தைச் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலானோர் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.
அதேவேளை, இன்றைய தினம் மொறட்டுவை பல்கலைக்கழத்தைச் சேர்ந்த மாணவர்களும் கேப்பாப்பரிலவு மக்களுடன் கைகோர்த்துள்ளனர். மேலும், சகல மாவட்டங்களையும் சேர்ந்த குறிப்பிடத்தக்களவான இளைஞர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வருவதோடு, இப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை அம் மக்களுடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இம் மக்களுக்கு ஆதரவாக புதுக்குடியிருப்பில் இன்றுடன் 24ஆவது நாளாக மக்கள் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதோடு, இப் போராட்டத்திற்கும் பலர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
பூர்வீக காணிகளுக்கு சொந்தக்காரர்களான இம் மக்கள் சுமார் ஒரு மாத காலமாக எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வீதியில், பனியிலும் மழையிலும் வெயிலிலும் என மாறி மாறி அவதிப்பட்டு வருகின்றபோதும் இம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமை குறித்து பல்வேறு தரப்பினர் விசனம் தெரிவித்து வருகின்றனர்.