ரஸ்யா – யுக்ரேன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இன்று காலை யுக்ரேனின் ஒரு முக்கிய அணையையும், நீர்மின் நிலையத்தையும், ரஸ்யப் படையினர் தாக்குதல் நடத்தி தகர்த்திருப்பதாக யுக்ரேன் குற்றம்சாட்டியுள்ளது. அணை உடைக்கப்பட்டதால், அதிலிருந்து பெருமளவு வெள்ளம் வெளியேறி அருகிலிருக்கும் பகுதிகளைச் சூழ்ந்து வருவதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
யுக்ரேன் நாட்டின் தெற்கு கெர்சன் பகுதியில் அமைந்திருக்கும் ’டினிப்ரோ ஆற்றில்’ கட்டமைக்கப்பட்டிருக்கும் பெரிய அணையையும், அதற்குள் இருக்கும் நீர்மின் உற்பத்தி நிலையத்தையுமே ரஸ்யா தகர்த்திருப்பதாக யுக்ரேன் குற்றம் சுமத்தியுள்ளது.
அணை உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால், அங்கு மக்களின் குடிநீருக்குத் தட்டுப்பாடு வரும் என அஞ்சப்படுகிறது. அதேசமயம் தண்ணீர் நீர்மின் நிலையத்தையும் சூழ்ந்து வருவதால், அதனால் விபத்துகள் ஏற்படும் என்ற பதற்றமும் நிலவி வருகிறது
தற்போது தகர்க்கப்பட்டிருக்கும் யுக்ரேன் அணை ரஸ்ய ஆக்கிரமிப்பு நகரமான நோவா கக்கோவ்காவில் உள்ளது, இதனால் அணையின் கட்டுப்பாடும் ரஸ்யாவின் கீழ் உள்ளது ககோவ்கோ பகுதியில் அமைந்துள்ளதால் இந்த அணை ‘கக்கோவ்கா அணை’ என்று அழைக்கப்படுகிறது.
சூழ்ந்து வரும் இந்த வெள்ள நீரால், சுமார் 16,000க்கும் அதிகமான மக்கள் ஆபத்தில் இருப்பதாக யுக்ரேன் தொிவித்துள்ளது. வெள்ள நீரை அகற்றுவதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக யுக்ரேன் ஆளுனா் அறிவித்துள்ளார். மேலும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, யுக்ரேனின் பிரதமர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அவசர நிலை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
யுக்ரேன் ராணுவமும், நேட்டோவும் இந்த தாக்குதலுக்கு ரஸ்ய ராணுவம்தான் காரணம் எனக் கூறிவரும் நிலையில், ரஸ்ய ராணுவம் யுக்ரேனைக் குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது