ஜப்பானில் பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயது 13 இலிருந்து 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டமூலத்தை ஜப்பானிய நாடாளுமன்றம் இன்று அங்கீகரித்தது. 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்குப் பின்னர் ஜப்பான் இவ்வயது எல்லையை அதிகரித்துள்ளது.
இதுவரை பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கு மிகக் குறைந்த வயதுடையோருக்கு அனுமதித்திருந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஜப்பானிலேயே இவ்வயதெல்லை மிகக் குறைவாக இருந்தது.
பிரிட்டனில் இவ்வயது 16 ஆகவும், பிரான்ஸல் 15 ஆகவும், ஜேர்மனி, சீனாவில் 14 ஆகவும் உள்ளது. இவ்வயதைவிட இளமையானோருடன் பாலியல் செயற்பாடுகள் வல்லுறவாக கருதப்படும்.
1907 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இவ்வயது எல்லையை ஜப்பான் அதிகரித்தமை இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன், பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கான தேவைப்பாடுகளை தெளிவுபடுத்தியுள்ளது. முன்னர் பலவந்தமான உடலுறவே வல்லுறவாகக் கருதப்பட்டது. புதிய சட்டத்தின்படி, சம்மதமற்ற பாலியல் உறவும் வல்லுறவாகக் கருதப்படும்.
16 வயதுக்கு குறைந்தவர்களை பாலியல் நோக்கங்களுக்காக சந்திப்பதற்கு அச்சுறுத்தல், பணம் வழங்குவதுபோன்றனவும் குற்றமாகும். இக்குற்றங்களுக்கு ஒரு வருடம் வரையான சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ஜப்பானிய யெண் வரையான அபராதம் விதிக்கப்படலாம்.
புதிய சட்டத்தின்படி, மற்றவர்களின் நிர்வாணம், பாலியல் செயற்பாடுகளை பார்ப்பது ஆகியவற்றை குற்றமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உடற்பாகங்கள், உள்ளாடைகளை இரகசியமாக படம்பிடித்தல் மற்றும் அநாகரிகமான செயற்பாடுகள் குற்றமாக்கப்பட்டுள்ளன. இக்குற்றங்களுக்கு 3 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை அலலது 30 லட்சம் யெண் வரையான அபராதம் விதிக்கப்படலாம். இந்த சீர்திருத்தங்களை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில், பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயது அதிகாரிப்பானது, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்ற செய்தியை சமூகத்துக்கு வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளது.