கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகளுக்கு இரண்டொரு தினங்களுக்குள் தீர்வு கணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் எனினும் மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளில் கால் பதிக்கும்வரை அவர்களுடைய போராட்டம் தொடரும் எனத் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும்; எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு விவகாரம் தொடர்பில் ஐனாதிபதியுடன் இன்று திங்கட் கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேப்பாபிலவு, புதுக்குடியிருப்பு மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி சுமார் ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கேப்பாபிலவில் 54 காணிகளுக்கு அரசாங்கத்தினால் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவற்றுள் 42 காணிகளுக்கான பத்திரங்கள் முல்லைத்தீவு அரசாங்க அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மக்களின் விருப்பத்தை அறிந்து, அவர்கள் விரும்புகின்ற காணிகளில் அவர்கள் குடியமர்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதுக்குடியிருப்பில் 19 பேருக்கு சொந்தமான 16 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருக்கின்றது எனவும் அதற்கு மாற்றீடாக வன இலாகாவிற்கு சொந்தமான காணி இனங்காணப்பட்டுள்ளமையால் அந்த காணிகளும் விரைவில் விடுவிக்பபடும் எனவுமட எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.