தமிழகத்தின் புதுக்கோட்டை கீரமங்கல நெடுவாசல் போராட்டத்தை மாநிலம் தழுவிய ரீதியில் மாற்றப்போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் நிலத்திலிருந்து எரிவாயுவை பெறுவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுடன் நிலத்தடிநீர் வளம் குறைவடையும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதி முதல் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுடைய போராட்டங்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டமாக மாறியுள்ளது.
இந்நிலையில், இப்போராட்டத்தினை முற்றுகை போராட்டம், மனித சங்கிலிப் போராட்டம், வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவது என மாறுபட்ட தொடர் போராட்டங்களாக நடத்தவுள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக ஜல்லிக்கட்டு இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.