குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-
சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரையின் நிறைவில் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய பாத யாத்திரை இதுவெனவும், அன்று லிப்டன் சுற்று வட்டத்தில் பாத யாத்திரையை ஆரம்பித்து கதிர்காமம் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் காலப்பகுதியிலும் அடக்குமுறைகள் காணப்பட்டதாகவும் எனினும் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச நீதிமன்றில் மண்டியிட்டு பாத யாத்திரையை தடுக்க முயற்சிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஒரு வருடமும் எட்டு மாதங்களுமே கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றார்கள், இதனால் எனக்கு பயந்து அரசாங்கம் நடுங்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைத்து விசாரணை நடத்துகின்றனர், புலனாய்வுப் பிரிவினரும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஆணையாளரும் இந்த தரப்பிற்கு உதவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகில் சர்வாதிகாரிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைவலி காய்ச்சலுக்குக் கூட இன்று அரசாங்கத்திற்கு 15 வீத வரியை செலுத்த நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களை திரட்டி இந்த அரசாங்கத்தை கவிழ்க்கத்தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.