ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினரிற்கு அறிவித்தார். அதனை மாநகர சுகாதார பிரிவினரால் குறித்த உணவகம் பரிசோதிக்கப்பட்டது. அதன் போது, உணவகத்தில் சுகாதார சீர்கேடுகளை சீர் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அந்நிலையில் மீண்டும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த உணவகம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்போது சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமலே காணப்பட்டது.
அதனை அடுத்து, பொதுச் சுகாதார சட்ட விதிகளின் கீழ் அந்த உணவகத்தின் உரிமையாளர் மீது யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
அதேவேளை யாழ். நகரில் உரிய அனுமதி பெறப்படாமல் இயங்கிய மற்றொரு உணவகத்திற்கு எதிராகவும், வழக்கு தொடரப்பட்டது.இரண்டு உணவகங்களுக்கு எதிரான வழக்குகளும் யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உணவகங்களின் குறைபாடுகள் சீர் செய்யப்பட்டு உரிய அனுமதியளிக்கும் வரை அவற்றை சீல் செய்து வியாபார நடவடிக்கையை இடைநிறுத்த மன்றில், பொது சுகாதார பரிசோதகர் விண்ணப்பம் செய்தார்.
விண்ணப்பத்தை ஆராய்ந்த மேலதிக நீதிவான் இரண்டு உணவகங்களையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளையிட்டார்.