நெடுவாசல் கிராம மக்களிடம் போராட்டக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது கிராம மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று 16-வது நாளை அடைந்துள்ளது
பேராட்டத்தில் 100 கிராமங்களை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று முன்னெடுத்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என அனைவரும் ஆதரவளித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக இந்திய மத்திய அரசு அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியை சந்தித்து குறித்த திட்டத்தை கைவிடக் கோரினர்.
இதன்பின்ன செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போராட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை இன்று சந்தித்து மனு கொடுக்கவுள்ளதாகவும் பொதுமக்களை திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த கலெக்டரிடம் அனுமதி கேட்கவுள்ளதாகவும் அதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிடுவதா, தொடர்வதா என்று முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.