இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இவ்வாறான ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது எனவும், எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி இந்த ஒப்பந்தம் காலாவதியாகின்றது எனவும் ஜே.வி.பி.யின் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கும் அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் ஆகியோருக்கு இடையில் 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது எனவும் இந்த ஒப்பந்தத்தை தற்போதைய அரசாங்கமும் மீள புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிராந்திய வலயத்தில் அமெரிக்கா யுத்தம் செய்ய நேர்ந்தால் இலங்கையின் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தைப் பயன்படுத்திக்கொள்ள நேரிடும் எனவும், அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற தரப்புக்களின் யுத்தங்களின் போது தேவையற்ற வகையில் நாம் அதில் பங்குதாரராக மாற வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.