களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரியொருவரைத் தாக்கியதுடன் இரு பாதுகாப்பு அதிகாரிகளை கடத்திச்சென்று தடுத்து வைத்தமை தொடர்பிலேயே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய பாதுகாப்பு பிரிவு அதிகாரி கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, விசேட காவல்துறை விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், கணினி பீடம் ஆகியன தவிர்ந்த ஏனைய பீடங்கள் நேற்று(04) பிற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் குறித்த பீடங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் இன்று(05) காலை 8 மணிக்கு முன்னர் விடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி அப் பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று(04) நாள் முழுவதும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது