வரி ஏய்ப்பு செய்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் ஒன்பது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
இதுகுறித்த 56 பக்க குற்றப் பத்திரிகையில் அவர் 2016 முதல் 19 வரை இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாள 1.4 மில்லியன் டொலர் வரி ஏய்ப்பு செய்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த ஹண்டர் பைடன் இந்த வரி ஏய்ப்பு குற்றங்களில் பெரும்பாலானவை அவரது தந்தை ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் ஆட்சியில் துணை அதிபராக இருந்தபோது நிகழ்ந்தது எனக் குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜோ பைடன் மீது தவறு செய்ததாகக் குற்றம் சாட்டப்படவில்லை. சமீபத்திய குற்றப் பத்திரிகையில் அவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை.
யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த ஹண்டர் பைடன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 17 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். ஹண்டர் பைடன் மீது சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த செப்டம்பரில் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் மகன் தனது பணத்தை போதைப் பொருள்கள், காவலர்கள், பெண்கள், சொகுசு ஹோட்டல்கள், கவர்ச்சியான கார்கள், ஆடைகள் மற்றும் இன்னும் சில தனிப்பட்ட பொருள்களிலும் செலவு செய்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்படுகிறது. சுருக்கமாக, அவரது வரிகளைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் அவர் பணத்தை செலவு செய்ததாக குற்றச்சாட்டு கூறுகிறது.
கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், அவர் ஏடிஎம்-இல் இருந்து 1.4 மில்லியன் டொலர் அளவிலான பணத்தை எடுத்திருக்கிறார்.
அதே காலகட்டத்தில் அவர் பல்வேறு பெண்களுக்காக ஆபாச படங்களுக்காகவும், ஆடை மற்றும் அணிகலன்களுக்காகவும் உடல்நலம், அழகு மற்றும் மருந்துகளுக்காகவும் செலவு செய்த தொகைகளை வழக்கறிஞர்கள் பட்டியலிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.