பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளையொட்டி நடைபெறும் இணைக் கூட்டமொன்றில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் மனோ தித்தவல்ல தெரிவித்துள்ளார்.
அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு எதிராக பின்னர் ; சாதாரண சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 1978ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் உருவாக்கப்பட்டதுடன், 1982ம் ஆண்டு அது நிரந்தர சட்டமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலீடாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இது தொடர்பிலான உத்தேச சட்ட வரைவு அமைச்சரவையின் அனுமதிக்காக விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
1 comment
‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஆலோசனைக்கமைய, பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது’, என ஐ நா சபையில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் திரு. மனோ தித்தவல்ல தெரிவித்துள்ளார்.
இது எவ்வளவு தூரத்துக்கு நம்பகமானதென்று தெரியவில்லை? இது குறித்து எந்தவொரு அறிக்கையும் தகுதிவாய்ந்த ஒரு அமைச்சராலோ அன்றி ஐ நாவில் இருக்கும் வெளியுறவு அமைச்சராலோ எதுவுமே தெரியப்படுத்தப்படவில்லை? இது போன்ற அறிக்கைகள் பொதுவாக, ‘ஹன்சாட்’, மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை? அதிவேகமாக இடம்பெறும் சில காணி விடுவிப்பு நடவடிக்கைகள் கூட, ஐ நா சபையையும், சர்வதேச நாடுகளையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே தெரிகின்றது?