411
இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறைப் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த நிலையில் காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது,
இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள் விளம்பரம் செய்கின்றனர். அதனை நம்பி அந்த இணைப்பின் ஊடாக உட்செல்வோருக்கு முதலில் சிறு தொகை பணத்தினை அவர்கள் சொல்லும் கணக்குக்கு இணையம் (online) ஊடாக பணத்தினை செலுத்த சொல்லுவார்கள்.
முதலில் சிறு தொகை பணத்தினை செலுத்த சொல்வதானால் , இவர்கள் எதுவும் யோசிக்காமல் பணத்தினை செலுத்தி விடுவார்கள். பணம் செலுத்தப்பட்டதும், அதொரு முதலீடு எனவும் , அதனால் வந்த வருமானம் என ஒரு தொகையை இவர்களுக்கு வைப்பு செய்து ஆசையை மேலும் தூண்டுவார்கள். இவ்வாறாக பெரும் தொகை பணத்தினை வைப்பிலிட்ட வைத்த பின்னர் , அந்த பணத்துடன் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள். அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் இவர்களுக் கு தெரியவரும்.
ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்த பின்னர் காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்வார்கள். அதில் யாருக்கு எதிராக முறைப்பாடு செய்வது , அவர்களின் விபரங்கள் என எதுவும் இருக்காது. அதனால் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுப்பதில் சவால்களை எதிர்கொள்கின்றனர். எனவே இவ்வாறான இணைய மோசடியாளர்களிடம் சிக்காது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறையின தெரிவித்தனர்.
Spread the love