Home இலங்கை என்னை கொல்ல வந்தவரை மன்னித்து விட்டேன்

என்னை கொல்ல வந்தவரை மன்னித்து விட்டேன்

by admin
தன்னை கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்மணியை தான் மன்னித்து விட்டதாகவும், அவரது விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி, அவரது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
 யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த 2004 ஆம் ஆண்டு, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம்தொடர்பில், அவசரகாலச் சட்டவிதியின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார்.
அவ்வாறிருக்க, வழக்கு விசாரணையின்போது கொழும்பு மேல்நீதிமன்றம் இவருக்கு ‘15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, இரன்டாண்டுகால சிறைதண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும்‘ என்கின்ற நிபந்தனையுடன் 2018 ஆம் ஆண்டு விடுதலை செய்துள்ளது.
எனினும் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருப்தியுற்றிராத சட்டமா அதிபர் திணைக்களம் அத்தீர்மானத்தை ஆட்சேபித்து மேல்முறையீட்டு நீதிமன்றில் மேல்முறையீடு செய்திருந்தது.
அந்த வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றமானது மேல் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து, அரசியல் கைதியான சத்தியலீலாவுக்கு 2023 இல் மரண தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் அவர், மேல்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு அளித்த தண்டனத் தீர்ப்பை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி வழக்கிலிருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றில் மீ்ண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 இவ்வாறிருக்கையில் சத்தியலீலா, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரலுயர்த்தி வருகின்ற, ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு ஒரு கருணை மனுவினை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் அவர், “என்னைப் பொறுத்தமட்டில் 14வருடங்களாக பட்ட துன்ப துயரங்களுக்குப் பின்னரும் ஒரு மரணதண்டனைக் கைதியாக மீண்டும் சிறைக்குச் செல்வதை இந்த ஜென்மத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாது.
அதைவிட உயிரை மாய்த்துக் கொள்வதே மேல். எனவே, ஜனாதிபதி அவர்கள், பிள்ளைகளையும், பெற்றோரையும் பிரிந்து14 ஆண்டுகாலம் சிறையில் வாடி விடுதலையான பின்பும் மரணதண்டனைத் தீர்ப்பிற்கு ஆளாகியுள்ள எனக்கு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி எனது இயல்பு வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கருணை மனு தொடர்பில்  நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, குரலற்றவர்களின் குரல் அமைப்பினால், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்போது, ஜனாதிபதிக்கு அருகிலிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், “அந்தப் பெண்மணியை எப்போதோ நான் மன்னித்துவிட்டேன். ஆகையால், இந்த விடயம் சம்மந்தமாக நான், சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அவரது துரிதமான விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் ” என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More