நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் இந்திய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நேற்றையதினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி கடந்த 16 நாட்களாக விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் போராட்டக்குழுவின் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வலியுறுத்திய போது தமிழக அரசு அந்த திட்டத் துக்கு அனுமதி அளிக்காது என அவர் உறுதியளித்த போதும் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், நெடுவாசல் சுற்றுவட்டார 50 கிராமங்களைச் சேர்ந்த போராட்டக்குழு பிரதிநிதிகளுடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை பேச்சுவார்த்தையை மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் முக்கியத்துவம், அதன் நோக்கம், அது எந்த வகையில் கிராமங்களையும், விவ சாயிகளையும் பாதிக்காது என்பவற்றை மடிக்கணினியில் எடுத்து வந்த ஒளிப்பதிவுகளை காட்டி விளக்கமளித்துள்ளனர்.
எனினும் விவசாயிகள் அவர்களது கருத்துகளை ஏற்க மறுத்து, எக்காரணம் கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் தொடங்கவிட மாட் டோம் எனவும் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை போராட்டத்தை தொடருவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.