முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரதேசத்தில் விடுவிக்கப்படாத 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் கேப்பாப்புலவின் முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தின் பிரதான வாயில் முன்பாக திரண்டு இராணுவத்துக்கு எதிராக கோசம் எழுப்பி தமது சொந்த நிலங்களை எம்மிடம் தாருங்கள் என கண்ணீர் மழ்க கதறி அழுது போராட்டத்த்தில் ஈடுபட்டனர். 128 குடும்பங்களிற்கு சொந்தமான 482 ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமம், சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, இசூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாப்புலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள், பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.