221
வடமாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 763 அரச உத்தியோகஸ்தர்கள் தங்களது சேவைகளில் இருந்து விலகியுள்ளனர். இவர்களில் ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து , 720 பேர் விலகியுள்ளனர். 36 பேர் எந்தவொரு அறிவித்தாலும் இல்லாமல் சேவையில் இருந்து விலகியுள்ளனர். 07 பேர் உரிய அறிவித்தல்களை வழங்கி உரிய முறையில் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் ஒருவர் உத்தியோகபூர்வமாக சேவையில் இருந்து விலகியுள்ளதுடன் , 21 பேர் உத்தியோகப்பற்றற்ற முறையில் விலகியுள்ளனர். ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த 99 பேரில் 79 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் உத்தியோகபூர்வமாக சேவையில் இருந்து விலகியுள்ளதுடன் , 07 பேர் உத்தியோகப்பற்றற்ற முறையில் விலகியுள்ளனர். ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த 41 பேரில் 14 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மன்னர் மாவட்டத்தில் இருவர் உத்தியோகபூர்வமாக சேவையில் இருந்து விலகியுள்ளதுடன் , ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த 16 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த 28 பேரில் 22 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மூவர் உத்தியோகபூர்வமாக சேவையில் இருந்து விலகியுள்ளதுடன் , 08 பேர் உத்தியோகப்பற்றற்ற முறையில் விலகியுள்ளனர். ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த 17 பேரில் 13 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்களின் இருந்து 05 ஆண்டு கால விடுமுறைக்கு விண்ணப்பித்த 625 பேரில் 576 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுபவர்களில் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. அந்நிலையில் வடக்கில் சேவையில் இருந்து விலகியுள்ள பெருமளவான அரச உத்தியோகஸ்தர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love