ISIS தொடர்பில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவர் தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு இந்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இணையத்தில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களை வழிநடத்திய தலைவராக கருதப்படும், தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான ஒஸ்மான் ஜெராட் என்பவர் கடந்த 31.05.24 லில் கொழும்பில் செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வருடன் இலங்கையில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
மேலும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நால்வரும் இலங்கையில் நடத்திய பிரசங்கங்களிலும் பங்குபற்றியுள்ளதாகவும் அதற்கு குறித்த சந்தேகநபரே திட்டமிட்டு ஆதரவளித்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.