வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளால் வடமாகாண சபை அமர்வு 2.30 மணி நேர தாமதத்திற்கு பின்னரே ஆரம்பமாகின. வடமாகாண சபையின் 87 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அமர்வு ஆரம்பமாக முன்னதாக வடமாகாண பட்டதாரிகள் வேலை கோரி மாகாண சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை அடுத்து பட்டதாரிகளின் பிரதிநிதிகள் 7 பேரை மாகாண சபைக்குள் அழைத்து உறுப்பினர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குறித்த பேச்சு வார்த்தை சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.
பேச்சு வார்த்தையின் முடிவில் மாகாண அமைச்சுக்களின் கீழான வெற்றிடங்களை நிரப்புதற்கு நாம் தயாராக உள்ளோம். அதற்கு வடமாகாண ஆளுனர் அனுமதி அளித்தால் வெற்றிடங்களை நிரப்ப முடியும் எனவும் அதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி ஆளுனரை சந்தித்து பேசவுள்ளதாக பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது.
அதனை அடுத்து பட்டதாரிகள் மாகாண சபை முன்பாக முன்னெடுத்த போராட்டத்தை கைவிட்டனர் . இருந்த போதிலும் தமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் தாம் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக தொடர் போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுக்க உள்ளதாக பட்டதாரிகள் அறிவித்து உள்ளனர்.