2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவுக்கு இன்று (13) கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
திலித் ஜயவீர சார்பில் கலாநிதி ஜீ.வீரசிங்க கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான தொழிற்சங்கத்தின் குழுவினர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய உதய கம்மன்பில, இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் திலித் ஜயவீர நட்சத்திர சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.
“இந்தத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை அவருக்கு உண்டு. ஏனெனில் 1950களில் இடதுசாரி சக்திகளும் தேசியவாத சக்திகளும் ஒன்றிணைந்து பண்டாரநாயக்கவிற்கு தலைமையை வழங்கினர்.
அடுத்து, செல்வி சிறிமாவோ பண்டாரநாயக்க கூட்டணிக்கு தலைமை தாங்கினார். அடுத்து மகிந்த ராஜபக்ச. இறுதியாக கோட்டாபய ராஜபக்ச. ஆனால் இன்று இந்த வரலாறு முழுவதும் அந்த தேசியவாத சக்திகளின் கொடியை பிடித்த தலைமைக்கு யாரும் முன்வரவில்லை.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கும் தேசப்பற்றுள்ள சக்திகளுக்கும் இருக்கும் ஒரே வேட்பாளர் திலித் ஜயவீர மட்டுமே. எனவே, நாட்டை நேசிக்கும் அனைவரின் வாக்குகளையும் அவர் பெறுவார் என நம்புகிறோம்.