2006-06-26 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து குடத்தனைக்கு வருவதற்காக முகமாலை பேரூந்தில் ஏறிய எனது மகன் இன்று வரை வீடு வரவில்லை. நான் எல்லா கோயில்களுக்கும் சென்று வருகின்றேன் எல்லோரும் சொல்கின்றார்கள் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே எனவே காத்திருகிறேன் நான் அவனை பார்த்துவிட்டே உலகத்தைவிட்டுச் செல்வேன் என அறுபது வயது தாயான வடிவேல் புஸ்பராணி கண்ணீருடன் தனது காத்திருப்பின் கதையை கூறினார்.
இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் 18 ஆவது நாளாக இரவு பகலாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட வடிவேல் புஸ்பராணி தனது மகன் வடிவேல் நிவேதன் காணாமல் ஆக்கப்பட்டது பற்றி கூறிப்பிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்
25-06-2006 நானும் எனது மகனும் அப்போது 19 வயது கிளிநொச்சி உதயநகரில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்திருந்தோம். அன்று மாலையே நான் மீண்டும் யாழ்ப்பாணம் குடத்தனைக்கு திரும்பி விட்டேன். ந}ன் திரும்பும் போது மகன் என்னிடம் அம்மா நீங்கள் போங்கோ நான் நாளைக்கே (26) வந்துவிடுகிறேன் பயப்பட வேண்டாம் எனக் கூறி அனுப்பி வைத்தான். ஆனால் அவன் கூறிய அந்த நாளைக்காக நான் இன்று வரை காத்திருக்கிறேன் . இனியும் காத்திருப்பன் அவன் வருவான் உயிரோடுதான் இருக்;கிறான் என கண்ணீர் மல்க தெரிவித்த புஸ்பராணி.
2006 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டாய ஆட்சேர்பில் மகன் பிடிக்கப்பட்டிருந்தாலும் அவன் 2009 இற்குள் உதயநகரில் உள்ள உறவினர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருப்பான். அல்லது வீட்டு முகவரிக்கு கடிதம் மூலம் தொடர்புகொண்டிருப்பான். எனவே உறுதியாக நான் நம்புகிறேன் மகன் முகமாலையில் வைத்தே காணாமல் போய்யிருக்கிறான். உதயநகரில் இருந்த உறவினர் ஒருவர் எனது மகனை முகமாலை நோக்கி பயணித்த பேரூந்தில் ஏற்றிவிட்டுள்ளார். அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை.
நான் இதுவரை மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம், பொலீஸ், ஆமி என பதிவுகளை எல்லா இடங்களிலும் மேற்கொண்டுவிட்டேன். இப்பொழுது மகனுக்காகவே காத்திருக்கிறேன். அவனை பார்த்துவிட்டால் போதும் நான் சென்றுவிடுவேன். அவனுக்காகவே இந்த அறுபது வயதிலும் காணாமல் ஆக்கபட்டவர்களின் போராட்டங்களில் எல்லாம் கலந்துகொண்டு வருகிறேன். மகனை பார்க்கவேண்டும், ஒருதடவையாவவது பேசவேண்டும், கவனமாக போங்கோ நான் வந்துவிடுவோன் என்று 25-06-2006 சொன்ன வார்த்தைகள் இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கிறது என அழுதப்படியே கூறிமுடித்தார் வடிவேல் புஸ்பராணி