ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 04 இலட்சத்து, 92 ஆயிரத்து 280 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் குறை நிரப்பு பட்டியலில் இருந்து 2ஆயிரத்து 463 பேர் இணைக்கப்பட்டுள்ளர்.
அதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு செயற்பாடுகள் இடம் பெற உள்ளன. வாக்காளர்களுக்கான அட்டைகள் தபால் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளன. அதன் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
யாழ். மாவட்டத்தில் ஆயிரத்து 792 பேர், விசேட தேவைக்குரிய வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது வாக்கினை சுமுகமான முறையில் அளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
விசேட தேவைக்குட்பட்டவர்களில் அதாவது, நிரந்தர வலிமை இழப்புக்கு உட்பட்டவர்கள் 262 பேருக்கு தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து விசேட அடையாள அட்டை கிடைக்க பெற்று அவை தற்போது வழங்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கான அடையாள அட்டை கிராம சேவையாளர் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது.யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொருத்தவரையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், 41 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதேபோல் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 14 வாக்கு என்னும் நிலையங்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் நான்காம் திகதி தேர்தல் அலுவலகம் மாவட்ட செயலகம், ஆகியவற்றில் இடம் பெற உள்ளன. ஐந்தாம் ஆறாம் திகதிகளில் ஏனைய திணைக்களங்களுக்கான வாக்களிப்புகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, நான்கு மற்றும் ஆறாம் திகதிகளில் போலீஸ் நிலையங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதனை தவற விட்டவர்கள், 11 மற்றும் 12ஆம் திகதிகளில் மாவட்டச் செயலகத்தில் மீள் வாக்களிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொருத்தவரையில், 21 ஆயிரத்து 773 தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இத்துடன் இன்றைய நிலையில் எமது மாவட்டத்தில், தேர்தல் தொடர்பான ஏழு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என தெரிவித்துள்ளார்.