Home இலக்கியம் போர்வன்மம் இல்லாத வாழ்வைத்தேடி : ச.முருகபூபதியின் ‘மீளுரு’ நவீன நாடகம்!

போர்வன்மம் இல்லாத வாழ்வைத்தேடி : ச.முருகபூபதியின் ‘மீளுரு’ நவீன நாடகம்!

முனைவர் ம.கருணாநிதி.

by admin

 

8.9.2024 நாளன்று முருகபூபதியின் மீளுரு நாடகம், சென்னை இலயோலா கல்லூரியில் நிகழ்த்தப்பெற்றது. மீளுரு நாடகத்தில் மணல் மகுடி நாடக நிலக் கலைஞர்களும், மதுரை மாவட்டம், கருமாத்தூர், அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களும் நடித்துள்ளார்கள். பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறைப்பட்டதாரிகள். கிராமிய வாசம் நுகர்ந்தவர்கள். அவர்களின் வார்த்தைத்தொனி அழகாக அரங்கில் ஒலித்தது. கிராமங்களின் குரல் தொனி, கதை கேட்கும் ஆர்வம், கேட்போரின் மனவெளியோடு கதைசொல்லும்தொனி, நாடகத்தில் கையாளப்பட்டுள்ளது.

மீளுரு நாடகத்தின் ஒளிக்கோலத்தை உருவாக்கியவர் விக்னேஷ் குமுளை. இவரின் அருமையான ஒளியமைப்பு ஒளிப்படிமங்களாக நாடக மையத்தை நோக்கி நகர்த்திச்சென்றன. நாடகப்பிரதியை உள்வாங்குவதோடு, நிகழ்த்துப்பிரதியையும் ஓர் ஒளிக்கலைஞன் உள்வாங்கி, நிகழ்த்துவெளிக்கு ஏற்ப ஒளிக்கோலத்தை உருவாக்கும்போது தான் நாடகம் கூடுதலாக உயிரோட்டமாகிறது. அந்தவகையில் மீளுரு நாடக ஒளிக்கோலங்களை உருவாக்கிய விக்னேஷ் குமுளை, நாடக உடல்மொழியோடும், நாடகத்தின் நகர்வோடும், அரங்கில் வைக்கப்பட்ட திரைச்சீலைகளோடும், வயயோதிக முகமூடிகளோடும் ஒளிக்காட்சிகள் வழிப் பன்முக அர்த்தத்தளத்தை உருவாக்கியுள்ளார். வெண்ணிற ஒளி, நீலநிற ஒளி, கருநிற ஒளி, செந்நிற ஒளி எனப் பலநிலைகளில் காட்சிகளில் ஒளிக்கோலங்களில் ‘மீளுரு’ நேர்த்தியாக இருந்தது. மீளுரு நாடக அரங்கவெளி ஏனைய மணல் மகுடி நாடகநில நாடகங்களிலிருந்து வேறுவடிவம் கொண்டுள்ளது. பார்வையாளர்களை நோக்கிய உரையாடல்கள் வெளிப்பாட்டு உத்தியிலிருந்து மேல்நோக்கி உரையாடலாகப் புதுமரபு சார்ந்த வெளிப்பாட்டுத்தன்மையைக் கொண்டிருந்தது. நாடகத்தின் பெரும்பான்மை பகுதியில் பார்வையாளர்கள் – நடிகர்களின் காட்சிக்கோணம் மாறுபடுகிறதை மீளுருவில் அவதானிக்கலாம். நாடகம் இனவாத, மதவாத, சாதியவாத வன்முறைகளைத் தோலுரிக்கின்றது.

பேரினவாத போரின் வன்மம் ஊடுருவி, கொலைகளை நிகழ்த்தி, பூர்வக்குடிகளை அழித்தொழிக்கும் நிலை உலகப் போரின் நீட்சியாய்த் தொடரும் அவலங்களை நிகழ்த்துவெளியில் கொண்டு வந்துள்ளது மீளுரு. வஞ்சிக்கப்பட்டவர்கள் வாஞ்சையோடு வலிகளை இசையாய் மீட்டிய விதம் நாடகத்தைப் பார்த்தவர்கள் கண்கலங்கி இருக்கக்கூடும்.   இரு கோமாளிகளின் வார்த்தைகள் விழிகளின் ஈரத்தைத் துடைத்தன. போரின் வலி சுமந்து வருகிறது மீளுரு.  தாலாட்டும் ஒப்பாரியும் ஒரே நேர்கோட்டில்  பாடப்பட்டுள்ளது. பேரினவாத வன்முறைகளை அரங்கேற்றியதால்  இறந்தோர்களுக்குப் பாடப்படும் ஒப்பாரிப்பாடலோடு தாலாட்டுப்பாடலும் வலிசுமந்து வருகிறது.

நாடகத்தின் தொடக்கத்தில் வனத்தில் வாழும் பெண்கள் ஒருவற்பின் ஒருவராக அரங்கின் மையப்பகுதி வழியாக வருகிறார்கள். அதில் வனப்பென் ஒருவர், போரின் பேரால் அடிமையாக்கப்பட்டு, நம்கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளைக் கட்டவிழ்க்கும் சாவி ஒன்றைத் தருகிறதாகக் கூறுகிறார். அச்சாவியின் குரலாகப் பலகுரல்கள் ஒலிக்கின்றன.

“தொல்குடித் தழும்புகள் ஏறிய அடிமை வாழ்வை மறுத்துச் சொன்ன கதைச்சாவி.” “தம் உடல்களைத் தவிர வேறெந்த உடைமைகளும் இல்லாத தப்பிப் பிழைக்க வழி

தேடி, பிறந்த மண்ணைத் தொலைத்தவர்கள் பாடும் உலகத்தைத் திறக்கும் சாவி.” “பசிக்குப் பலியான மரித்தோரின் உயிருள்ள கதைகளைப் பார்க்க வைக்கும்  திறவுகோல்.”

“பலியான கன்னிகளின் குரல்கள் எழுந்து வாடும் நிலத்திற்கு அழைத்துப் போகும் சாவியிது.”

“குரல்வளையில் தோட்டாக்கள் குத்தி நிற்கத் துடிக்கும் கதை நாவிற்குத் தண்ணீர் கொண்டு வந்த மாயப்பெண் கொடுத்த சாவி.”

வன்முறைக்கு எதிராக அன்பெனும் மொழிதலை நாடகக்கலைவழியாக உரக்கச்சொல்லும் நிகழ்த்துதலை மீளுரு நாடகம் கொண்டிருந்தது. நாடகம் வழிக் கதைசொல்லல் பூடகத்தன்மையோ, காட்சிகள் இருண்மைத்தன்மையோ இல்லாமல் பார்வையாளர்களைச் சென்றடைந்தன. பறவை, மிருக உடல்மொழியில் தவழ்ந்து, பறந்து, ஊர்ந்து, வனத்தின் மீது நிகழும் வன்முறையினைத் தனக்குள்ளிருந்து பேசும் நடிகர்கள் நேர்த்தியான முறையில் உடல்மொழியை வெளிப்படுத்தினார்கள். மணல் மகுடி நடிகர்களான ஈஸ்வரன், விக்னேஸ்வரன், சக்தி மணிகண்டன், பிரபாகரன், தீபன் ஆகியோர்களின் நடிப்புடல்களின் உடல்மொழி பன்மியமாக வெளிப்பட்டது. அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் நடிப்பின் உடல்மொழி தேர்ந்த நடிகர்களின் குரல்தொனி, இசைக்கருவிகளைப் பயன்படுத்திய விதம், தங்குதடையின்றி பாத்திரமாதல், போரின் வலியின் தடம் தேடி வலியோடும் அடிபட்டு ரணத்தின் விளிம்பில் இருப்போரின் பாவனையை நாடகத்தில் வெளிப்படுத்தினார்கள். நடிப்பு வாசனையே நுகராதவர்களாக இருந்த மாணவர்களை முப்பது நாட்கள் பயிற்சியின் வழி மீளுரு நாடகத்தை நிகழ்த்து வெளியில் கொண்டு வந்துள்ளார் முருகபூபதி.

வளாகச் செயல்பாடுகளில் அரங்கியல் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவர்களை நடிப்பிற்கான உடல்மொழியை அணங்கேறிய உடலாக, வனங்களில் வாழும் பல்லுயிர் உடலாக, மாந்த இன விடுதலை உடலாக, பெண்மைய உடலாக மொழிப்படுத்தியுள்ளது சிறப்பிற்குரியது. பலகாலம் பயிற்சி பெற்றவர்களைப்போல ஒவ்வொரு மாணவர்களும் நடிப்பின் வழி ஒட்டுமொத்த நாடக மையத்தை நோக்கிய பல குரல்களாக வெளிப்பட்டார்கள். இந்நாடகத்தில் மதுரை வட்டாரத்தொனி, கரிசல் வட்டாரத்தொனி, கொங்கு வட்டாரத்தொனி என ‘மீளுரு – சூலிசைக்கடுங்கூத்து’ பலதொனியில் அமைந்தது.

இந்நாடகத்தில் இரு கட்டியம் சொல்வோர் நடித்தார்கள். இருவரது நடிப்பு, பார்வையாளரைத் தன்வசமிழுத்தது என்றே சொல்ல வேண்டும். கட்டியம் சொல்வோர் முக ஒப்பனையில் ஒருவர் மீசையின்றியும், இன்னொருவர் ஹிட்லர் மீசை வைத்தும் ஒப்பனை செய்யப்பட்டுள்ளவிதமும் கட்டியங்காரர்களின் குரல்தொனியும் சிறப்பாக அமையப்பெற்றது. பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ், அன்னா அக்மதோவா, சமயவேல், சபரிநாதன் ஆகியோர்களின் போர் எதிர்ப்புக் கவிதைகள் அரங்கமொழியாக்கப்பட்டு நிகழ்த்தப்பெற்றன. இவை மீளுருவிற்குக் கூடுதல் பலம்.

உலகளாவிய சூழலில் அச்சுறுத்தப்பட்டு வரும் வன்முறைகளின் மேல் விசாரணையை ஏற்படுத்துகிறது மீளுரு. வன்முறையின்பால் நிகழும் அனைத்துவிதமான காயங்களுக்கு இசையே மருந்தாகும். இசைக்கலையே அனைத்துத் தாக்குதலை நிறுத்த அறைகூவல் விடுக்கும். கலைவழியாகக் கருணையால் அரவணைக்கும் தோழமையை நாங்கள் நடிப்புடல்களில் சுமந்து வருகிறோம். உங்களின் மனந்திருந்தும் நிலையைக் கலைவழிக் கலகக்குரலை எழுப்பியவண்ணம் இருப்போம் என்பதை மீளுரு முன்மொழிகிறது.

காடே காட்டுக் குயிலே… என வனங்கள் தேடியும், பாறைகள் தேடியும், மரவேர் தேடியும், இசையால் பாடுவோம்… இசை தான் வலிகளுக்கான மருந்து எனச் சமவெளி மனிதர்களுக்கு உணர்த்துவோம். நாங்கள் ஒரு போதும் எங்கள் பூர்வீக வனத்தை விட்டு வரமாட்டோம். சமவெளி மனிதர்களுக்கு இசையால் எங்கள் வழமையை முன்வைப்போம் என மீளுரு நாடகம், மணிப்பூர் பழங்குடி மனிதர்களின் மேல் ஏவப்பட்ட பாசிச வல்லாதிக்கத்தின் வலியைப் பேசுகிறது.

அரங்கின் நடுவில் அமைக்கப்பட்ட திரைச்சீலை போரிலிருந்து தம்மைப் பாதுகாக்க மக்கள் பதுங்குக் குழியில் இருப்பது போலவும், நடிகர்கள் திரைச்சீலையின் உள்ளிலிருந்து வருவது, பதுங்குக்குழியில் உள்ள மனிதர்களைக் காட்சிப்படுத்துவது போலவும் நாடகத்தின் அர்த்தக்களம் காட்சிவழி விரிந்தது. பதுங்குக் குழியிலிருந்து மீண்டுவருவதாக நடிப்புடலில் நடிகர்கள் வெளிப்பட்டார்கள். உணவு, மாற்றுடையின்றி அழுக்கேறிய உடைகளை அணிந்திருந்தார்கள். பள்ளிகளைக்  கைவிட்ட குழந்தைகளுக்குப் பதுங்குக்குழிகளிலேயே கற்பித்தல் பயிற்சி நடந்தேறியது. நூலகத்தில் உள்ள நூல்களை வன்முறையாளர்கள் குண்டுபோட்டு அழித்தார்கள். “பதுங்குக் குழியில் படிக்கின்ற என் பாப்பா குண்டுகளுக்கு இரையாகிவிட்டாள்…பாப்பா…பாப்பா எங்க இருக்க?” எனத் தாய் புலம்புவது வன்முறைக்கு எதிரான வலியின் குரலில்  கண்ணீரும் சேர்ந்து கரைகிறது.

போரின் உச்சத்தில் வீசப்படும் குண்டுகளால் மனிதர்கள் மட்டும் சாகவில்லை. ஆடுகள், மாடுகள், மரங்கள், பறவைகள் எனப் பல்லுயிரிகளும் செத்தொழிந்தன. வன்மத்தின் கோரபற்களால் அனைத்தும் காவுவாங்கப்பட்டன. அறிவை விரிவுசெய்யும் நூல்கள் உட்பட மனித உடைமைகள் அனைத்தையும் வன்முறையாளர்கள் விட்டுவைக்கவில்லை என்பதே வரலாற்று உண்மையும் கூட. பேரினவாதப்போரினால் மண்ணில் ஆழவேரூன்றிய மரங்கள் கூட வேரறுத்து விட்டன. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நீளும்  வல்லாதிக்கப் பேரினவாதப் போரால் எத்தனை எத்தனை உயிர்கள் அழிந்தன என்பதையும், உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த தீலிபன் போன்ற ஈகியரின் நினைவூட்டல் வடுக்களாய் மீளுருவில் நீள்கிறது.

மீளுரு ஒரு காட்சியில், எப்பவும் வருகிற பறவைகளுக்காகக் காத்திருத்தல் தொடர்கிறது. ஒரு தாயிடம் அவளின் குழந்தை கேட்டும் கேள்விகள்,  மௌனிகளாக இருக்கும் ஒவ்வொருவருக்குள் முட்களாய்த் தைக்கின்றன. அந்தப் பறவைகள் எல்லாம் வரவில்லை அம்மா.. எப்ப அம்மா? அந்த பறவைக  வரும்? அந்தப் பறவைகள சுட்டுட்டாங்களா அம்மா? சுடுறத எப்ப… அம்மா… நிறுத்துவாக?  என மீளுரு ஒரு குழந்தையின் குரலால் வன்முறைக்கு முடிவே இல்லையா? என ஒலிக்கிறது.

அன்பு, அரவணைப்பு, அறிவு, காதலுணர்வு, தோழமை கொள்ளல், பல்லுயிர்களிடத்தில் பற்றோடு இருத்தல் என இதயத்தில் ஈரம் சுரக்கும்  பிணைப்பினைக் குண்டுகளால் சிதைக்கப்படுவதை மீளுரு நாடகம் காட்சிகளாகக் கொண்டு வந்துள்ளன.

நிறைவுக் காட்சியில் வெண்ணிறக் கருமுட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரங்கவெளியில் பெண் நடிகர்கள் அனைவரும் சடங்கு நிகழ்த்துவதுபோல வருகைதந்து,   கருமுட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றினை தன்வாயால் கவ்வித் தூக்கிச்செல்லும் காட்சி,  பெண்களின் உலகு வன்முறையற்ற மனிதவாழ்வை உருவாக்கும் என நாடகம் கூறுகிறது. மேலும், இக்காட்சி கூடுதல் புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. குண்டடிபட்டு வன்முறையால் காயங்களுக்குக் கட்டப்பட்ட துணியை ஒவ்வொருவரும் தன் வாயால் கவ்விக்கொண்டு அரங்கின் மையப்பகுதியில் மிகப்பெரிதாக வகைப்பட்ட பொம்மை அணுகுண்டுகளின் திரியை வாயால் கவ்வியெடுத்து அணுகுண்டுகளை அப்புறப்படுத்துவது போலவும் அமைந்திருக்கிறது. பின்னர், அனைவரும் “நாங்க வந்துவிட்டோம்” என அணங்குநிலையில் பரவசமடைகிறார்கள்.

முரசு, துடும்பு வாத்தியக்கருவிகளை அனைவரும் வாசித்து, பூர்வக் குடிகளை வணங்கி வாசிப்போமென்று சொல்லி அடிடா…. என நடிகர்கள் வாசித்த இசைக்கருவிகள் பேரொலிகளாக ஒலித்தன. துயரம் நிறைந்த குலவையொலிகளால் துடிப்போடு  வந்துள்ளோம். போரினால் எங்கள் வாழ்வு சிதிலமடைந்து போனது.  மறுவாழ்வு தேடி வலியின் கதைசொல்லும்  நடிகர்களாக நாங்கள் வந்திருக்கிறோம். முகமூடிகளின் சடங்கியல் வாழ்வை நிகழ்த்தி, மூங்கில் இசை வாத்தியங்களை எல்லோரும் வாசித்தபடி வனத்தின் இருளுக்குள் வெளிச்சத்திற்கான ஒளியை எங்கள் இசைகொண்டு இறந்தோரை உயிர்ப்பிக்கும் சடங்கின் நிகழ்த்துதலாக நிகழ்த்துகிறோம். போரால் மாயமான மக்களை மீட்டெடுக்க – மீளுருவாக்க – உயிர்ப்பிக்க எத்தனிக்கிறது மீளுரு நாடகம்.

மீளுருவாக்கலாக ஒவ்வொரு நடிகர்களும்  வனங்களின் மீது நிகழ்த்தப்பட்ட யுத்தத்தின் வலி வேதனைகளைக் கதைகளாகச் சொல்கிறார்கள். இயற்கை வளங்களையும், கனிமவளங்களையும் எடுத்துச் செல்வதற்காகக் குகைகளிலும், மலைகளிலிலும், வனங்களில் வாழும் மனித சமூகத்தின்மேல் நிகழ்த்தப்படும் போர்களை எதேச்சதிகாரத்தால் நியாயமாக்கப்படுகிறது. மக்களோ வல்லாதிக்கத்திற்கு இரையாவதும், எதிர்-கலகக்குரலையும் எழுப்புகிறார்கள்.

சைபீரிய வனத்திற்குள் பழங்குடியினத்தின்மீது பாய்ந்த வன்முறையில் மக்களின் இரத்தம் பாறைகளில் படிந்திருக்கிறது. இரத்தம்படிந்த பாறையை வணங்கிக் குலவையிட்டு, சடங்காட்டம் ஆடுகிறார்கள் மீளுருவில் நடிகர்கள். யுத்தம் காட்டிற்குள் நிகழ்த்தப்பட்டு, யுத்தத்தின் நீட்சியாக நாட்டிற்குள் நுழைந்து மக்களை வீழ்த்துவது எவ்வகை அறமாகும் என மீளுரு கேள்வியை எழுப்புகிறது. நம் கண்முன்னே இலங்கையில் நடந்த போர் நம்நினைவில் உறைந்த வடுக்களாக இருக்கின்றன.

நீங்க போரெ நிறுத்துங்க… இறகால கெஞ்சிக்கேட்கிறோம்… செடியின் மனசால கெஞ்சிக்கேட்கிறோம்… பறவைங்க உயிர தொட்டு கேட்கிறோம்.  போர நிறுத்துங்களேன்… எனும் மீளுரு நடிகரின் குரல் சைபீரிய சாமன் எனும் பழங்குடி மக்களின் போர் வன்மத்திற்கு எதிரான குரலாக நாடகத்தில் ஒலித்தது. சாமன் பழங்குடிகளின் எழுச்சிக்குரலுக்குக் குண்டுமழை பொழிந்தும், வன்முறைக்கு எதிராக பழங்குடியிசை அனைவரையும் உயிர்த்தெழச் செய்தது.

முகமூடிகள் மாற்றிய புது உரு கொண்ட பலரும் எழுந்து வரும் போரின் அடையாளமான நெடுந்துணியை இழுத்து, விரித்து, வாசிக்க மறுபடியும் எதிர் பக்கம் வரும் மற்றொரு போர் துணியைக் கூட்டாக இழுத்துப் போட்டு உடல் அசைவுகளோடு ஆடியாடி தோலிசை வாசிக்கின்றார்கள்.

நாடகத்தில் மிகநீண்ட – உயர்ந்த சுவரின் இருபுறமும் நடிகர்கள் உரையாடுவது வன்முறை வாழ்வின் உண்மையைக் குறிப்பிடுகிறது. பச்சிளம் குழந்தையைப் பிரிந்து சிறையில் வாடும் தாயின் தாலாட்டு பாடல் சிறைச்சுவரை உடைக்கிறது. தூரி.. தூரி.. தூராரோ….ஆரி ஆரி ஆராரோ….. அக்கா…அக்கா…. என் பிள்ளை தூங்கிட்டாளா அக்கா… அக்கா…என் பிள்ளை சமத்துப் பிள்ளை… என் குரல கேட்டு தூங்கியிருப்பா…அக்கா…என் பிள்ளைய  நல்லாப் பார்த்துக்கோ அக்கா…. நாளைக்குத் தாலாட்டுப் பாட வருவேன் அக்கா… நல்லாப் பார்த்துக்கோ அக்கா….. நல்லா பார்த்துக்கோ….. என இரு சகோதரிகள் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்கள் கட்டுப்பட்ட பலர் சுவரில் இருபக்கத்திலுமிருந்து சுவரைத் தட்டித்தட்டி ஆயிஷா… முகமது, ரஹீம் என்று பெயர்களைக் கூறிச் சத்தமிடுகின்றனர்.

மாட்டு மணியொலிகளால் பேசிக்கொள்ளும் இருவர், மணியொலி ஒருபக்கம் நின்று போக நம்முடைய மாடு, அப்பா, அண்ணா இப்படி இப்படியெனப் பலர் சிறைச்சாலையின் சுவர்களுக்குள் அகப்பட்டுக் கிடப்பவர்களின் சோகமொழியை நிகழ்வெளிக்குள் புதுக்கோணத்தில் நடிகர்கள் நீண்டு, உயர்ந்திருக்கும் மதிற்சுவருக்கு இருபுறமும் சிறைப்படுத்தப்பட்ட அவலவாழ்வை மீளுரு நாடகத்தில் வானத்தை நோக்கி, தம் குரலை உயர்த்திப் பேசுவது போல அமைந்துள்ளது. இந்த மதிற்சுவர் சிறைச்சாலையில் இருக்கும் சுவராகவும், சாதி, மத எல்லைகடந்து காதல்கொள்வோரைத்தடுக்கும் ஆணவச்சுவராகவும், உத்தப்புர சாதியச்சுவராகவும் படிமங்கொள்வதோடு, கொண்டுகூட்டுப் பொருள்கொள்ளவைக்கிறது.

தங்கையும், அக்காவும், தங்கைக்காக அண்ணனும், தந்தைக்காகப் பிள்ளைகளும், காதலிக்காகக் காதலனும், தாயும் பிள்ளையும் எனப்பல உறவுமுறைகளுக்குள் போர் -வன்மம் உருவாக்கிய கையறுநிலையில் தவிக்கும் காட்சி,  துன்பத்தைக் கண்டு கண்ணீர் வடிப்பதோடு நின்று விடவில்லை. சிறைப்படுத்தப்பட்டவர்களின் பிரிவின் துயர் ஒருகட்டத்தில் குண்டுகளுக்கும் தாக்குதல்களுக்கும் அஞ்சாநெஞ்சம் கொண்டு சிறைச்சுவரைத் தகர்த்தெறிகிறார்கள். இது சாதியத் தீண்டாமைச்சுவரைத் தகர்த்தெறிகின்ற புரிதலையும் உருவாக்கியது. மேலும், சிறைச்சுவரை உடைப்பது, கண்ணீர்களும் காயங்களின் வலிகளும் புத்தெளிச்சி பெறச்செய்கிறதாக நாடகம் காட்டுகிறது. சுவரைத் தட்டித் தட்டிப் பேசி ஓலமிடும் பெண்ணும் ஆணும், “கோமாளி இல்லனா பூமி தாங்காது, எதுவானாலும் பார்த்துக்கொள்வோம்” எனச் சிலர் சுவரின் இருபக்கமிருந்தும் புல்லாங்குழல்களால் பேசிக்கொள்கிறார்கள். குண்டு விழும் சத்தம் கேட்டதும் சுவரின் ஒருபக்கத்தில் இருப்பவர்கள் விழ, மறுபக்கத்தில் ஒரு புல்லாங்குழல் மட்டும் நின்று போன புல்லாங்குழல்களைத் தேடிப் பதறி அலைகிறது. தடையாக இருக்கும் சுவர் மீதான உரையாடல் நாடகத்தில் புதுத்தொனியைக் காட்டுகிறது.

நடிகர்கள் எல்லோரும் துடும்பு, தோலிசை இசையிசைத்து, சடங்காட்டத்தை நிகழ்த்தி ஆடுகிறார்கள். “நாங்கள் வந்துட்டோம். போர் நிறுத்த முரச இப்ப அடிங்கடா.” என இசையுடன் கூடி அடித்து, ஆடியாடி அணங்குக்குரலெடுத்து உச்சநிலைக்குப் போகிறார்கள். மாந்த இனத்தையும் பல்லுயிர்களையும் அழித்தொழிக்கும் வல்லாதிக்கப்போரை நிறுத்த வேண்டுமெனப் போர் எதிர்ப்பொலியாகப் போர் எதிர்முரசை உச்சநிலையில்  வாசித்தவாறே மீளுரு நாடகம் நிறைவுறுகிறது. இரு நாடுகளுக்கு இடையே தொடரும் போர் பெருகிவரும் இச்சூழலில் மாந்த இனங்களை அழித்தொழிக்கும் வன்மத்திற்கு எதிராக நாடகக் கலைஞர்களின் குரலாக மீளுரு நாடகத்தில் ஒலிக்கிறது.

 

முனைவர் ம.கருணாநிதி

karunanidhi@shctpt.edu

 

 

 

 

 

Spread the love

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More