60
யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிகள் இன்றி சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதாகவும், அவ்வாறு மரங்கள் தறிக்கப்படும் போது 0779273042 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வி. சகாதேவன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் அனுமதிகள் இன்றி பனை மரங்கள் பெருமளவில் தறிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உட்பட விடுமுறை தினங்களில் உத்தியோகஸ்தர்கள் வி டுமுறையில் நிற்கும் நாட்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மரங்களை தறிக்கின்றனர்.
இருபாலை மற்றும் நீர்வேலி பகுதிகளில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுமதிகள் இன்றி பனை மரங்கள் தறிக்கப்படுவதாக எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று , அதனை தடுத்ததுடன் , அனுமதியின்றி மரங்களை தறித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அதேபோன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தனங்கிளப்பு பகுதியிலும் அனுமதியின்றி பனை மரங்களை தறித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். பனை வளங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். எனவே அனுமதிகள் இன்றி பனை மரங்கள் தறிக்கப்பட்டால் 0779273042 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களிடம் கோருகிறேன் என மேலும் தெரிவித்தார்.
Spread the love