ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.
இந்த மாதம் 24 ஆம் திகதி தொடங்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்த முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தீர்மானங்களை இயற்றுவதும் கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கான திட்டங்களைத் தொடங்குவதும் அமெரிக்காவே. இப்படியாக அமெரிக்காவின் முனைப்பில் கொண்டுவரப்படும் தீர்மானங்களிற்கு மேற்கத்தைய நாடுகள் ஆதரவளித்து வந்தன. அமெரிக்கா இந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகிக் கொண்டால் அது இலங்கைக்கு நன்மைபயப்பதாகவே அமையும். நமது எதிர்கால மனித உரிமைகள் திட்டத்திற்கு இது நல்லதொரு தொடக்கமாகும். தேசிய திட்டத்தை நாமே சொந்தமாக முன்வைக்க முடியும். இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவு கிடைத்தால், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை முறியடிக்க முடியும்” என கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா மேலும் தெரிவித்தார்.

