அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திருத்தியமைக்கப்பட்ட புதிய பயணத்தடை உத்தரவினை அமுல்படுத்துவதற்கு ஹவாய் நீதிபதி தடை விதித்துள்ளார். இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ட்ரம்பின் திருத்தியமைக்கப்பட்ட பயணத் தடை உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஹவாய் மாநில நீதிபதி டெரிக் வட்ஸன் (Derrick Watson) இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை கருதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் கேள்விக்குரியதாகவே இருப்பதாக நீதிபதி டெரிக் வட்ஸன் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த திருத்தியமைக்கப்பட்ட புதிய பயணத்தடை உத்தரவின் பிரகாரம், சூடான், சிரியா, சோமாலியா, ஈரான், லிபியா மற்றும் ஏமன் ஆகிய ஆறு முஸ்லிம் நாட்டு மக்கள் 90நாட்களுக்கு மக்கள், அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் 120 நாட்களுக்கு குறித்த நாடுகளிலிருந்தும் அகதிகள் அமெரிக்காவினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் வகையில், இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.