நாடாளுமன்றச் சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யத் தனிநபர் உறுப்பினர் பிரேரணையை முன்வைப்பேன் என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்.
கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதை எதிர்க்கும் அனைவரும் இந்தப் பிரேரணையை ஆதரிப்பார்கள் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் வரம்பற்ற அளவு பொய் பரப்பப்படுகிறது. இதை நாடாளுமன்றச் சிறப்புரிமையைப் பயன்படுத்தியே செய்கின்றனர்.பொய்களைப் பரப்புவதற்காக அன்றி மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காகவே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலை மாற வேண்டும்.
இது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நிலைமையைச் சரிசெய்யத் தனிநபர் உறுப்பினர் பிரேரணையை நான் கொண்டு வருவேன்.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் எத்தனை பேர் நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதை எதிர்க்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
நாம் உண்மையைப் பேசினால், நமக்கு அத்தகைய சலுகை தேவையில்லை. நான் அதைக் கோரவில்லை. நான் எடுக்காத நடவடிக்கைகள், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் அல்லது படுகொலைகளில் ஈடுபடுவது, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ நான் ஒருபோதும் சிறப்புரிமை கோர மாட்டேன். பொதுமக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் இந்த முயற்சியை எதிர்ப்பார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.

