உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளார்:-
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் திறைசேரிப் பிரதிநிதிகளுக்குமிடையில் 04.08.2016 இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், சம்பள அதிகரிப்பிற்காக திறைசேரியால் ஒதுக்கப்பட்ட ஆண்டொன்றிற்கு 360 மில்லியன் ரூபாவானது கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய போதாது என தொழிற்சங்க கூட்டுக்குழு தெரிவித்துள்ளமையை அடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது இரண்டு சுற்றுநிருபங்களை வெளியிட்டுள்ளது.
இதனால் தொழிற்சங்கப் போராட்டமானது 05.08.2016 வெள்ளியன்று மேலும் தீவிரம் அடைந்துள்ளது. கொழும்பிலுள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன் ஒன்றுதிரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் வேலைநிறுத்த காலப்பகுதியில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றி வந்த சில ஊழியர்கள் வெள்ளி மதியத்துடன் பணியில் இருந்து விலக்கபர்பட்டுள்ளனர்.
இதுவரை சப்பிரகமுவ மற்றும் இரஜரட்ட பல்கலைக்கழகங்கள் முழுமையாக கல்வி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிந்திக் கிடைத்த செய்திகளின் பிரகாரம் நாளை 06.08.2016 சனிக்கிழமை உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளார்