Home இலங்கைநயினாதீவு கொடியேற்றம் 26ஆம் திகதி – முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

நயினாதீவு கொடியேற்றம் 26ஆம் திகதி – முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

by admin
நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி  அம்மன் கோவில் உயர் திருவிழா எதிர்வரும்26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.  கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து கலந்துரையாடலில், நயினாதீவில் மூழ்கிய கடற்பாதையினால் கடற் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள இடையூறை தவிர்ப்பதற்காக ஒரு பகுதியை கடற்படையின் ஒத்துழைப்புடன் அகற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் குடிநீர் தேவைப்பாடுகள் – ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அமுதசுரபி மண்டபம் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கான தேவையான அளவு குடிநீர்களை சீராக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை சீராக வழங்கும்.
திருவிழா காலத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு 50 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவது எனவும், சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் ஆகியவற்றுக்கு மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை.
ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதியினை நிரந்தரமாக புனரமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீர் செய்ய நடவடிக்கை.
திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் விசேட திருவிழாவான சப்பறம், தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் காலை 4.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் எனவும் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கும் சேவை இடம் பெற ஒழுங்கு செய்யப்பட்டது.
குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
திருவிழா காலங்களில் நயினாதீவு கிராமங்களில் திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த  காவல்துறை உத்தியோகத்தர்களின் நடமாடும் சேவையினை ஈடுபடுத்தவும் நடவடிக்கை.
யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை.
குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுப்பது , ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேறு பொருத்தமான இடத்தில் மாற்றவும் நடவடிக்கை.
நயினாதீவுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கட்டடப்பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது முற்றாக தடைசெய்வது எனவும், தொடர்ந்து எதிர்காலத்தில் கட்டடப் பொருட்களை நயினாதீவு வங்களாவடி துறைமுகத்தின் ஊடாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, படகுச் சங்கம், ஆலய அறக்காவலர் சபையினர் மற்றும் பொது அமைப்புகள் ஆய்வு செய்து இறுதி தீர்மானம் எடுப்பது எனவும் கலந்துரையாடலில்  தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் நயினாதீவில் மதுபான விற்பனையினை மதுவரித்திணைக்களம் நடமாடும் சேவையூடாக கண்காணிப்பது எனவும், விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது எனவும், பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை அமுதசுரபி அன்னதான சபையினால் மதிய உணவு இரவு உணவு வழங்கப்படும் மேலும், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை,  அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் சிவகரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More