குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2006ம் ஆண்டு மூதூரில் 17 தன்னார்வ தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவம் போன்றன தொடர்பில் இதுவரையில் எவரும் தண்டிக்கப்படவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை தற்போது இணைந்து செறய்பட்டு வருகின்றமை வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை இன்னமும் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் பரிந்துரைகளில் ஒரு சில விடயங்கள் மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் விவகாரத்தில் சர்வதேச பங்களிப்புடன் கூடிய பொறிமுறைமை என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் பரிந்துரைக்கு ஆதரவளிப்பதாகவும், அதன் ஊடாகவும் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.