Home இலங்கைகால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு – நாளையுடன் நிறைவு

கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு – நாளையுடன் நிறைவு

by admin
செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.  அதன் போது , அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மதிக்கப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் தெளிவான விளக்கத்தினை பெற யாழ் . பல்கலைக்கழக இந்து நாகரிக துறை மூத்த விரிவுரையாளர் புதைகுழி பகுதிக்கு அழைக்கப்பட்டு , அது தொடர்பிலான அவரது அவதானிப்புகள் விளக்கங்கள் கோரப்பட்டன.
அவரது தனது அவதானிப்பின் படி , இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்பு கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்பு கூடு இல்லை என தனது அவதானிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அதனை அடுத்து அது தொடர்பிலான விபரமான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் செ. லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை , செம்மணி மனித புதைகுழிக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நாளைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் , அடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் நாளைய தினம் நீதவான் திகதியிடுவர் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

மேலும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 12ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 44 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 53 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 17 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்    இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நாளைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More