சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து கதைப்பதை சில பெரும்பான்மை தேரர்களும் அரசியல்வாதிகளும் இனவாதமாக சித்தரிக்க முயல்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். எமது மக்கள் எமக்கு வாக்களித்து எம்மீது பொறுப்புக்களை சுமத்தியிருப்பது அவர்களின் உரிமைகளுக்கும் தேவைகளுக்கும் குரல் கொடுக்கவேயன்றி வேறு எதற்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர்கள் இனவாதம் பேசுவதை விடுத்து அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டுமென அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் அதிகாரப்பகிர்வைக் கோரி நிற்பது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் அல்ல எனவும் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் சேர்த்தே அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம் எனவும் தெரிவித்த அவர் முழு நாட்டு மக்களினதும் நன்மைக்காக பேசும் நாம் இனவாதிகளா என கேள்வி எழுப்பியுள்ளார்.